க்ரைம்

பொறையாறு அருகே சிறுமி, காதலன் உயிரிழந்த சம்பவம்: வன்கொடுமை சட்டத்தின் கீழ் 5 பேர் கைது

செய்திப்பிரிவு

மயிலாடுதுறை: பொறையாறு அருகே சிறுமி, காதலன் உயிரிழந்த சம்பவத்தில், வன்கொடுமை சட்டத்தின் கீழ் சிறுமியின் தந்தை உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் சாத்தங்குடி புதுப்பாளையத்தை சேர்ந்தவர் பார்த்திபன்(19). இவர் 17 வயது சிறுமியை காதலித்

துள்ளார். இதையறிந்த சிறுமியின் உறவினர்கள், தன்னை மிரட்டி தாக்கியதாக பொறையாறு போலீஸில் பார்த்திபன் புகார் அளித்திருந்தார்.

பின்னர், நேற்று முன்தினம் பார்த்திபன், சிறுமி இருவரும் சாத்தங்குடியில் ஒரு கீற்றுக் கொட்டகையில் தூக்கில் சடலமாக தொங்கினர். அவர்கள் கொலை செய்யப்பட்டதாகக் கூறி, சிறுமியின் வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளை பார்த்திபன் உறவினர்கள் சூறையாடியதுடன், சாதி வன்கொடுமையின் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியினரும் பங்கேற்றனர். இறப்பதற்கு முதல்நாள் பார்த்திபன் அளித்திருந்த புகாரின்பேரில், சிறுமியின் உறவினர்களான சூர்யா(28), மணிமாறன்(27), வசந்தன்(24), விஜயகுமார்(26) ஆகியோரை பொறையாறு போலீஸார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

சிறுமியின் தந்தை லட்சுமி காந்தனுக்கு உடல் நிலை பாதிப்பு இருந்ததால், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், நேற்றிரவு அவரும் கைது செய்யப்பட்டார். இதனிடையே, சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று முன்தினம் இரவு மயிலாடுதுறையில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

ஆனால், இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றக் கோரி, பார்த்திபன் உடலை பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதையடுத்து, தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் சீர்காழி கோட்டாட்சியர் சுரேஷ் தலைமையில் நேற்று அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.

அப்போது எஸ்.பி.(பொ) ஸ்டாலின் பேசும்போது, ‘‘இருவர் உயிரிழந்தது தொடர்பாக இயற்கைக்கு மாறான மரணம் என்றுவழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் சாத்திய கூறுகள் இருந்தால் கொலை வழக்காக மாற்றப்படும்’’ என்றார். இதையடுத்து, தங்களால் பரிந்துரைக்கப்படும் 2 மருத்துவர்களைக் கொண்டு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். பிரேத பரிசோதனை முழுவதையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசால் வழங்கப்படும் நிவாரணம், அரசு வேலை மற்றும் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என பார்த்திபன் தரப்பினர் வலியுறுத்தினர்.

அரசு வேலை, நிவாரணம், வீட்டு மனைப் பட்டா ஆகியவை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். மற்ற கோரிக்கைகள் உடன் நிறைவேற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து, பார்த்திபன் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கு உறவினர்கள் ஒப்புதல் அளித்தனர்.

SCROLL FOR NEXT