சென்னை: சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.6 கோடி மதிப்பிலான உயர்தர ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
தாய்லாந்தின் பாங்காக்கிலிருந்து நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு ஏர் ஏசியா விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத் துறை ஏர் இன்டெலி ஜென்ட் அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது, ஓர் இளைஞரை சந்தேகத்தின்பேரில் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
அந்த இளைஞர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், அவரது உடைமைகளை சோதனையிட்டனர். அவரது சூட்கேஸைத் திறந்து பார்த்தபோது, அதில் பாலிதீன் கவர்களால் சுற்றப்பட்டிருந்த 15 பார்சல்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றை பிரித்துப் பார்த்தபோது, அதில் 5.9 கிலோ எடையுள்ள உயர்தர ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து, இளைஞரிடம் நடத்திய விசாரணையில், அவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதும்,பணத்துக்காக குருவியாக செயல்பட்டதும் தெரியவந்தது.
மேலும், இந்த கஞ்சாவை பெற்றுக்கொள்ள விமான நிலையத்துக்கு வெளியே தயாராக ஒருவர் காத்திருப்பதாகவும், அவரிடம் இந்த கஞ்சா பொட்டலங்களை ஒப்படைக்க இருப்பதாகவும் அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து விசாரணை: இதையடுத்து விமான நிலையத்துக்கு வெளியே காத்திருக்கும் அந்த நபரைப் பிடிக்க அதிகாரிகள் விரைந்தனர். அதற்குள் கேரள இளைஞர் பிடிபட்ட தகவலறிந்த அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள இளைஞரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் சர்வதேச மதிப்பு ரூ.6 கோடி எனவும், பிடிபட்ட இளைஞர் இப்போதுதான் முதல் முறையாக குருவியாக செயல்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.