க்ரைம்

சென்னை: மதுபோதையில் தகராறு செய்த கணவன் கொலை - உடலை கால்வாயில் வீசிய மனைவி கைது

செய்திப்பிரிவு

அண்ணாநகரில் மதுபோதையில் தகராறு செய்த கணவனை கத்தியால் குத்தி கொலை செய்து, உடலை கோணிப்பையில் கட்டி கழிவுநீர் கால்வாயில் வீசிய பெண் கைது செய்யப்பட்டார்.

சென்னை, அண்ணா நகர் கிழக்கு, 'ஓ பிளாக்' 29-வது தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயில் கடந்த 5ம் தேதி ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் சம்பவ இடந்து விரைந்து வந்து, உடலை மீட்டு தீவிர விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். கடந்த 5-ம் தேதி நள்ளிரவில், ஒரு பெண் பெரிய கோணிப் பையை இழுத்து வந்து கால் வாயில் வீசிவிட்டுச் செல்வது கேமராவில் பதிவாகியிருந்தது.

          

அந்த அடையாளங்களை வைத்து தேடிய போது, அவர் அண்ணா நகர் கிழக்கு, அன்னை சத்யா நகரைச் சேர்ந்த அம்பிகா (57) என்பது தெரிய வந்தது. அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இது குறித்து, போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: அம்பிகா, ஹவுஸ் கீப் பிங் வேலை செய்து வந்தார். அவரது கணவர் சந்தானம் (60), நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.

மது அருந்தும் பழக்கம் உடைய அவர் தினமும் போதையில் அம்பிகாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். ஒரு வாரத்துக்கு முன்பும், சந்தானம் மது அருந்திவிட்டுர் வந்து, அம்பிகாவிடம் தகராறு செய்துள்ளார். கோபமடைந்த அம்பிகா, வீட்டில் இருந்த கத்தியால் குத்தியதில் சந்தானம் உயிரிழந்தார்.

கொலை செய்த பிறகு, உடலை என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த அம்பிகா, கணவரின் உடலை வீட்டிலேயே வைத்துள்ளார். 5 நாட்கள் கடந்த நிலையில், உடல் அழுகி துர்நாற்றம் வீசத் தொடங்கியது. இதையடுத்து, கடந்த 5ம் தேதி நள்ளிரவில் கணவர் உடலை ஒரு கோணிப்பையில் கட்டி இழுத்துச் சென்று அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் வீசியுள்ளார். இதையடுத்து, அம்பிகாவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT