சோபியா, முஜைதீன்
பூந்தமல்லி: ஆண் நண்பருடன் செல்போனில் தொடர்ந்து பேசிய மனைவியை கொலை செய்த கணவனை போலீஸார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு அருகே உள்ள பட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் முஜைதீன்(30). இறைச்சிக் கடை ஊழியரான இவருக்கு சோபியா (26) என்பவருடன் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 7 வயதில் ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக சோபியா ஆண் நண்பர் ஒருவருடன் நீண்ட நேரமாக செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சோபியாவை முஜைதீன் கண்டித்துள்ளார்.
அதனை பொருட்படுத்தாமல் சோபியா தொடர்ந்து பேசி வந்ததால், கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இச்சூழலில், வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு சோபியா ஆண் நண்பருடன் செல்போனில் பேசியதால், கோபத்தில், முஜைதீன் வீட்டிலிருந்த இறைச்சி வெட்டும் கத்தியால் மனைவியை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த, மாங்காடு போலீஸார் சோபியாவின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப் பதிவுசெய்து, நேற்று அதிகாலை மாங்காடு பகுதியில் தலைமறைவாக இருந்த முஜைதீனை கைது செய்தனர்.