சென்னை: மனைவி, மகளை கொலை செய்த காவலாளியை போலீஸார் கைது செய்தனர். சென்னை திருவிக நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (47). தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாகப் பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி சிவரஞ்சனி (43). டெய்லரான இவர் வீட்டிலேயே துணி தைத்து வந்தார். இந்த தம்பதிக்கு 10-ம் வகுப்பு தேர்வெழுதியுள்ள பிரணவ் (16) என்ற மகனும், 4-ம் வகுப்பு படித்த ஜெயஹரிணி (9) என்ற மகளும் உள்ளனர்.
வீட்டின் கீழ்த்தளத்தில் சீனிவாசனின் தாய் மைதிலியும், மேல் தளத்தில் சீனிவாசன் குடும்பத்துடனும் வசித்துவந்தனர். நேற்று முன்தினம் இரவுப் பணி முடிந்து வீட்டுக்கு வந்த சீனிவாசன் மனைவி, மகளுடன் தூங்கினார். பாட்டி மைதிலியுடன் பேரன் பிரணவ் தூங்கினார்.
இந்நிலையில் நள்ளிரவில் கணவன், மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கத்தியால் மனைவி கழுத்தை அறுத்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மகள் கதறினார். உடனே அவரது கழுத்தையும் அறுத்துவிட்டு சீனிவாசன் வீட்டைவிட்டு ஓடிவிட்டார்.
பின்னர் நேற்று அதிகாலை, தாய் மைதிலிக்கு போன் செய்து, நான் மனைவி, மகளை கொலை செய்துவிட்டேன் என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக மேலே சென்று பார்த்தபோது அங்கு மருமகள் சிவரஞ்சனி, பேத்தி ஹரிணி கழுத்து அறுபட்ட நிலையில் சடலமாகக் கிடந்தனர்.
தகவலறிந்த திருவிக நகர் போலீஸார் விரைந்து சென்று தாய், மகள் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் திருமுல்லைவாயலில் பதுங்கியிருந்த சீனிவாசனைக் கைது செய்தனர்.
சீனிவாசன் கடந்த 2 ஆண்டுகளாக மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். மனைவி சிவரஞ்சனியின் நடத்தையில் சீனிவாசன் சந்தேகம் அடைந்துள்ளார்.
ஒருவரை சுட்டிக்காட்டி அவருடன் மனைவியை இணைத்துப் பேசியுள்ளார். சம்பவத்தன்று இரவு கணவன், மனைவி இடையே வழக்கம்போல் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த சீனிவாசன் மனைவியை கொலை செய்துள்ளார். இதைக் கண்டு கதறிய மகளையும் கொலை செய்தார். பாட்டியுடன் மகன் தூங்கியதால் உயிர் தப்பியதாக போலீஸார் தெரிவித்தனர்.