சூர்ய பிரேம்குமார் | நளினி
சென்னை: சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரைச் சேர்ந்த சங்கரன் (72) என்பவர், உணவகம் ஒன்றில் கேசியராகப் பணியாற்றி வருவதுடன், கடந்த 15 ஆண்டுகளாக வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வருகிறார்.
இந்நிலையில், அவர் பணியாற்றும் உணவகத்தில் பாத்திரம் கழுவும் வேலை செய்து வந்த நளினி (30) என்பவர், வாடகை வீட்டுக்குச் செல்ல முன்பணமாக கடந்த ஏப்ரல் மாதம் ரூ.30 ஆயிரம் கேட்டுள்ளார். இதையடுத்து சங்கரன் அவரிடம் பணம் கொடுத்துள்ளார். தொடர்ந்து பல்வேறு காரணங்களைக் கூறி, அவரிடம் நளினி ரூ.2.5 லட்சம் வரை கடனாக பெற்றுள்ளார். ஒருமுறை நளினி, ரூ.2.5 லட்சத்தைத் திருப்பிக் கொடுக்க வந்தபோது, போலீஸார் அவரைத் தடுத்து பணம் குறித்து விசாரித்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது, சங்கரனைக் காப்பாற்றுவதற்காக வேறு ஒருவரை பணம் கொடுத்தவராகக் காட்டியதாகவும், அந்த நபர் சிறையில் இருப்பதாகவும் நளினி தெரிவித்துள்ளார். மேலும், சிறையில் உள்ள நபரைப் பிணையில் எடுக்கப் பணம் தேவைப்படுவதாகவும், பின்னர் அந்த நபர் இறந்துவிட்டதாகவும் கூறி, நளினி, அவரது கணவர் சூர்ய பிரேம்குமார் (39) மற்றும் நளினியின் மாமா மணி ஆகியோர் சங்கரனிடம் பல்வேறு காரணங்களைக் கூறி பணம் கேட்டுள்ளனர்.
இதனை நம்பி சங்கரன், ஜி-பே மற்றும் ரொக்கமாகச் சிறுகச்சிறுக மொத்தம் ரூ.20.97 லட்சம் வழங்கியுள்ளார். தொடர்ந்து செல்போனில் தொடர்புகொண்டு பணம் கொடுக்காவிட்டால் குடும்பத்தினரைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சங்கரன் அளித்த புகாரின் பேரில் ஆதம்பாக்கம் போலீஸார் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, மோசடியில் ஈடுபட்ட மதுரை மாவட்டம் தலவாசல், சம்மட்டிபுரத்தைச் சேர்ந்த சூர்ய பிரேம்குமார் (39), அவரது மனைவி நளினி (30) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.