குன்றத்தூர்: குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம் பகுதியில் கணவன், மனைவி தங்களது 5 வயது மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், கணவன் வேலைக்குச் சென்றிருந்தபோது, வீட்டில் இருந்த குழந்தை காணாமல் போனதால் பதற்றமடைந்த தாய், அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தார்.
எங்கு தேடியும் குழந்தை கிடைக்காத நிலையில், வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று பார்த்த போது, அங்கிருந்த கழிவறையில் இருந்து குழந்தை அழுதபடி வெளியே வந்தது. அப்போது வீட்டின் உரிமையாளர் செல்வம் (48) அங்கிருந்த சுவருக்கிடையே மறைந்தபடி நின்றிருந்தார்.
இது குறித்து குழந்தையிடம், ஏன் அழுகிறாய்? என்ன நடந்தது என்று தாய் விசாரித்த போது, வீட்டின் உரிமையாளர் செல்வம், சிறுமியை மொட்டை மாடி கழிவறைக்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், கத்தி கூச்சலிட்ட சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், வீட்டின் உரிமையாளர் செல்வத்துக்கு தர்ம அடி கொடுத்தனர்.
பின்னர், இதுகுறித்து பல்லாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு வந்த போலீஸார், தாக்குதலில் இருந்து செல்வத்தை மீட்டு, சிகிச்சைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விசாரணையில், வீட்டின் உரிமையாளர் செல்வம், சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதால், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை சிறையில் அடைத்தனர்.