பூனம் லலித் சர்மா, ஷில்பா
சென்னை: ஹோமியோபதி படித்துவிட்டு, ஆங்கில மருத்துவம் பார்த்த மும்பை பெண், உதவியாளருடன் கைது செய்யப்பட்டார். சென்னை நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் பிரபலமான தனியார் உணவகம் உள்ளது.
அங்குள்ள அறை ஒன்றில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த பூனம் லலித் சர்மா (52) என்பவர் ஹோமியோபதி மருத்துவம் படித்துவிட்டு, காது தொடர்பான பிரச்சினைகளுக்கு ஆங்கில மருந்துகளைப் பயன்படுத்தியதோடு, அறுவை சிகிச்சைகளை செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து, சென்னையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில் பூனம் லலித் சர்மா ஆங்கில மருத்துவம் படிக்காமல் அது தொடர்பான சிகிச்சை அளித்து வந்தது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து அவர்கள் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து பூனம் லலித் சர்மா, அவருக்கு உதவியாகவும் இருந்து வந்த சவுகார்பேட்டையைச் சேர்ந்த ஷில்பா (44) ஆகிய இருவரைக் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ஆங்கில சிகிச்சை முறைக்கு பயன்படுத்தப்படும் ஊசிகள், மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட இருவரும் நேற்று முன்தினம் சிறையில் அடைக்கப்பட்டனர்.