சென்னை: பொதுத்துறை வங்கியில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து ரூ.6 கோடி வரை கடன் பெற்று மோசடி செய்தது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவாஜி ஹைடெக் அக்ரோ ஃபுட்ஸ் என்ற நிறுவனம், பொதுத்துறை வங்கியில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து கடன் பெற்று, ரூ.6 கோடியே 10 லட்சம் வரை மோசடி செய்ததாக, வங்கி நிர்வாகம், கடந்த 2024-ம் ஆண்டு சிபிஐயிடம் புகார் அளித்தது. இதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், புகார் மீது வழக்குப்பதிவு செய்ய சிபிஐக்கு உத்தரவிடக் கோரி வங்கி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
உரிய நடவடிக்கை அவசியம்: இந்த வழக்கு, நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, "சிபிஐ விசாரணை செய்வதற்கான ஒப்புதலை தமிழக அரசு திரும்பப் பெற்று விட்டதால், வழக்கு பதிவு செய்வதற்கு ஒப்புதல் வழங்கக் கோரி, தமிழக அரசுக்கு அனுப்பப்பட்ட கடிதம், கடந்த ஓராண்டாக நிலுவையில் உள்ளது. இதேபோன்ற வங்கி மோசடி வழக்கில் உயர் நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது" என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, ரூ.6 கோடி வங்கி மோசடியில் சம்பந்தப்பட்டவர்கள் வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளதால், புகாரை நீண்ட காலத்துக்கு நிலுவையில் வைத்திருப்பது முறையல்ல. அதனால், ஆதாரங்களை மீண்டும் சிபிஐக்கு அளிக்கும்படி வங்கி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், முதல்கட்ட விசாரணை நடத்தி, மோசடி நடந்துள்ளதற்கு முகாந்திரம் உள்ளது என கண்டறிந்தால், வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க, சிபிஐக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.