சென்னை: இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னையில் இருந்து அந்தமானுக்கு நேற்று புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளையும், அவர்களின் உடமைகளையும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தனர்.
அப்போது, ஜெர்மனி நாட்டை சேர்ந்த லூயிஸ் ஆண்ட்ரூஸ்(45) என்பவர் அந்த விமானத்தில் செல்ல வந்தார். அவருடைய உடமைகளை சோதனை செய்த போது, உடமைக்குள் ஜிபிஎஸ் கருவி ஒன்று இருந்தது.
இந்திய விமான பாதுகாப்பு சட்ட விதிகளின்படி, ஜிபிஎஸ் கருவியை விமான பயணிகள், தங்களுடன் எடுத்து செல்லக் கூடாது என்ற விதிமுறை இருப்பதால், அந்த பயணியிடம் அதிகாரிகள் விசாரித்தனர்.
அப்போது அவர், ஒரு மாதத்துக்கு முன்பு ஜெர்மனியில் இருந்து சென்னைக்கு சுற்றுலா பயணியாக வந்தேன். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்துவிட்டு, அந்தமானுக்கு சுற்றுலா செல்கிறேன்.
ஜெர்மனியில் இருந்து வரும் போதே, இந்த ஜிபிஎஸ் கருவியை எடுத்து வந்தேன். அப்போது விமான நிலையத்தில், இந்த கருவிக்கு தடை விதிக்கவில்லை என்று தெரிவித்தார்.
அவரது விளக்கத்தை ஏற்காத அதிகாரிகள், அவரது பயணத்தை ரத்து செய்து, அவரையும், ஜிபிஎஸ் கருவியையும் விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக, போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.