க்ரைம்

புதுச்சேரி நல்லவாட்டில் 45 பவுன் நகைகள், ரூ.1.50 லட்சம் பணம் திருட்டு

அ.முன்னடியான்

புதுச்சேரி: தவளக்குப்பம் அருகே கப்பல் நிறுவனத்தில் பணிபுரிபவர் வீட்டில் 45 பவுன் தங்க நகைகள், ரூ.1.50 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி தவளக்குப்பம் அருகே உள்ள நல்லவாடு மீனவ கிராமம் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் விஜயேந்திரன் (41). மும்பையில் உள்ள தனியார் கப்பல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு முகுந்தாவதி என்ற மனைவியும் ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். நேற்று நல்லாவட்டில் உள்ள குட்டியாண்டவர் கோயிலில் ஆடிமாத திருவிழா நடைபெற்றது. இதற்கு முகுந்தாவதி தனது பிள்ளைகள் மற்றும் சென்னையில் இருந்து வந்த உறவினருடன் சென்றுள்ளார்.

திருவிழா முடிந்து இரவு வீட்டுக்கு வந்த முகுந்தாவதி, 2 பீரோக்களின் கதவுகள் திறந்த நிலையில் இருந்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பீரோக்களில் இருந்த 45 பவுன் தங்க நகைகள் ரூ.1.50 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இது குறித்து முகுந்தாவதி புகாரின் பேரில் தவளக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இங்கு அண்மையில் ஒரு வீட்டில் இருந்து 15 பவுன் நகை திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT