க்ரைம்

தூத்துக்குடியில் இருந்து படகில் இலங்கைக்கு கடத்த முயன்ற வெள்ளாடுகள், புறாக்கள் பறிமுதல்

ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்ற வெள்ளாடுகள் மற்றும் புறாக்களை கியூ பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இலங்கையில் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விளையும் அதிகமாக இருப்பதால் தமிழகத்தில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து சட்டவிரோதமாக படகுகள் மூலம் கடத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக தூத்துக்குடியில் இருந்து மஞ்சள், ஏலக்காய், பூச்சிக்கொல்லி மருந்துகள், வலி நிவாரணி மாத்திரைகள், வாசனை சோப்புகள், ஷாம்புகள் போன்றவை கடத்தப்பட்டு வருகின்றன. இதேபோல் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களும் தொடர்ந்து கடத்தப்படுகிறது.

இதனால் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர், சுங்கத்துறையினர், கியூ பிரிவு போலீஸார், கடலோர காவல் படையினர், கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் மற்றும் உள்ளூர் போலீஸார் தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி திரேஸ்புரம் அண்ணா காலனி கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு வெள்ளாடு மற்றும் புறாக்கள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கியூ பிரிவு உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர் மற்றும் போலீஸார் நேற்று இரவு அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது இரவு 9.45 மணியளவில் திரேஸ்புரம் அண்ணா காலனி கடற்கரையில் பதிவு எண் இல்லாத இரட்டை எஞ்சின் பொருத்தப்பட்ட பைபர் படகில் சிலர் வெள்ளாடுகளையும், சில பெட்டிகளையும் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

போலீஸாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர். போலீஸார் அந்தப் படகை சோதனை செய்தபோது அதில் 8 வெள்ளாடுகள் மற்றும் மூன்று பெட்டிகளில் புறாக்களும் இருந்தன. இவற்றின் இலங்கை மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இவைகளை படகு மூலம் இலங்கைக்கு கடத்த திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வெள்ளாடுகள், புறாக்கள் மற்றும் பைபர் படகை பறிமுதல் செய்து கியூ பிரிவு போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT