திருவிடைமருதூர்: பந்தநல்லூரில் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இருந்து சிறுமியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டதா என்பது குறித்து விசாரிக்க உறவினர்கள் போலீஸில் புகாரளித்துள்ளனர்.
திருவிடைமருதூர் வட்டம், பந்தநல்லூர், அரசடியைச் சேர்ந்தவரும் லாரி ஓட்டுநருமான தங்கராசு (48), மனைவி மேகலா (33). தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களில் 2-வது மகள் பந்தநல்லூர் அரசுப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் அண்மைக்காலமாக சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (டிச.3) சிறுமி உயிரிழந்தார்.
அவரது, உடல் நேற்று அவரது குடும்பத்தினரால் முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு மண்ணியாறு இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (டிச.4) காலை இடுகாடு வழியாக வந்துசென்ற அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், சிறுமி புதைக்கப்பட்ட இடத்தில் 3 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து, அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் மற்றும் அரசடி கிராம மக்கள் இடுகாட்டில் வந்து பார்த்தபோது, அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் 3 அசடி பள்ளம் தோண்டப்பட்டிருப்பதும், அந்த பள்ளத்தில் சிறுமியின் உடை மற்றும் லேசாக வெளியே தெரிந்துள்ளது. எனவே அவரது உடல் உள்ளே உள்ளதா அல்லது வெளியில் எடுத்துச் சென்று விட்டார்களா என்ற சந்தேகம் எழுந்தது. இதையறிந்த அந்த கிராமத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு பரபரப்பானது.
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர், பந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தகவலின் பேரில் அந்த இடத்திற்கு வந்த போலீஸார், அங்கு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், வருவாய்த்துறையினர் முன்னிலையில், போலீஸார் சிறுமி புதைக்கப்பட்ட இடத்தை ஆய்வு செய்ய உள்ளனர்.
இந்தச் சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும், 6 அடி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் 3 அடி பள்ளம் பறிக்கப்பட்டுள்ளது, மேலும் 3 அடி பள்ளம் பறித்த பின் தான் முழுவிவரம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.