கோப்புப் படம்

க்ரைம்

செஞ்சி சிறுமி மாயமான வழக்கு: கிராம மக்களிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை

செய்திப்பிரிவு

விழுப்புரம்: செஞ்சி சிறுமி மாயமான வழக்கில், அச்சிறுமியின் கிராமத்தைச் சேர்ந்தவர்களிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி ஊராட்சி நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த அக்டோபர் 12-ம் தேதி அதிகாலை காணாமல் போனார். இதுகுறித்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின்பேரில் சத்தியமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

எஸ்பி மதிவாணன் மேற்பார்வையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. 10 நாட்களை கடந்தும் துப்பு கிடைக்காததால், சிறுமி மாயமான வழக்கு சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது. உள்ளூர் சைபர் க்ரைம் உதவியுடன் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிபிசிஐடி போலீஸாரிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டு 30 நாட்கள் கடந்த நிலையிலும் துப்பு கிடைக்கவில்லை. விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாமல் சிபிசிஐடி போலீஸார் திணறி வருகின்றனர்.

இந்நிலையில், சிறுமியின் பெற்றோர், பாட்டி மற்றும் அதேகிராமத்தைச் சேர்ந்த ஒரு சிலர் மீது சிபிசிஐடி போலீஸாரின் பார்வை மீண்டும் திரும்பி உள்ளது. ஒவ்வொருவரையும் தனித்தனியாக விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சிலர் மற்றும் வெளியூரில் வசிக்கும் உறவினர் ஒருவரிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT