திருவான்மியூரில் கள்ளச் சந்தையில் காஸ் சிலிண்டர்களை விற்பனை செய்த தந்தை, மகனை போலீஸார் கைது செய்து 40 சிலிண்டர்களை பறிமுதல் செய்தனர்.
சென்னை, திருவான்மியூர், சித்திரை குளத் தெருவில் உள்ள ஒரு வீட்டில், வணிக மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர்கள் சட்ட விரோதமாகப் பதுக்கப்பட்டு, கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகத் திருவான்மியூர் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், நேற்று முன்தினம் அந்த வீட்டில் போலீஸார், சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வீட்டை ஒரு சிறிய கிடங்கு போல மாற்றி, அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான சிலிண்டர்களைக் கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த நீலமேகம் (80) மற்றும் அவரது மகன் குமார் (41) இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்,
இருவரும் வீட்டு உபயோக சிலிண்டர்களைப் பதுக்கி, தட்டுப்பாடு நிலவும் சமயங்களில் தேவையுள்ளவர்களுக்கு ரூ.3 ஆயிரத்துக்கும், வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களை ரூ.6,000 முதல் ரூ.7,000 வரை விற்று வந்தது விசாரணையில் அம்பலமானது.
தொடர்ந்து, வீட்டில் இருந்து 32 வீட்டு உபயோக சிலிண்டர்கள் மற்றும் 8 வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கள் என மொத்தம் 40 சிலிண்டர்களை போலீ ஸார் பறிமுதல் செய்தனர். கைதான நீலமேகம் மற்றும் குமார் ஆகிய இருவரையும் திருவான்மியூர் போலீஸார், சிவில் சப்ளை சிஐடி போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.