சென்னை: மும்பையைச் சேர்ந்த பிரபல தாதாவான சோட்டா ராஜன், சர்வதேச அளவில் பிரபலமான தாவூத் இப்ராகிமுடன் இணைந்து இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தார். கடந்த 1993-ல் தாவூத் இப்ராகிமுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக பிரிந்து தனி அணியாக செயல்பட்டு வந்த சோட்டா ராஜன் மீது நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
27 ஆண்டுகாலமாக போலீஸ் பிடியில் சிக்காமல் இருந்த சோட்டா ராஜன், இன்டர்போல் போலீஸாரின் உதவியுடன் கடந்த 2015-ம் ஆண்டு இந்தோனேஷியாவின் பாலிதீவில் அந்நாட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டார். தற்போது டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மத்திய மும்பை ஹாம்தேவி பகுதியில் தனியார் ஓட்டல் உரிமையாளரை கொலை செய்த வழக்கு மற்றும் ஒரு செய்தியாளரை கொலை செய்த வழக்கு போன்றவற்றில் சோட்டா ராஜனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 2002-ம் ஆண்டு சென்னையில் விஜய கதம் என்ற பெயரில் ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்றுள்ளதாக சோட்டா ராஜன் மீது சென்னை சிபிஐ போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு சென்னை எழும்பூரில் உள்ள கூடுதல் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சோட்டா ராஜனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ.55 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.