தாம்பரம்: தாம்பரம் அருகே சோமங்கலம் புதுப்பேட்டில் ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.9 லட்சம் கொள்ளையடித்த வழக்கில், கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் மேவாட் கொள்ளைக் கும்பலின் செயல்பாடுகள் குறித்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 25-ம் தேதி அதிகாலை புதுப்பேட்டில் உள்ள ஏடிஎம் மையத்துக்குள் புகுந்த கும்பல், காஸ் கட்டர் மூலம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றது. இது தொடர்பாக தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், ராஜஸ்தானில் மற்றொரு ஏடிஎம் கொள்ளை வழக்கில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பவன்குமார் (28) கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், புதுப்பேடு கொள்ளையில் 5 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ஹரியானாவைச் சேர்ந்த முகமது முஸ்தபா (32) என்பவரையும் அண்மையில் தாம்பரம் மாநகர போலீஸார் கைது செய்தனர். மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.
விசாரணையில், ஹரியானா– ராஜஸ்தான் மாநில எல்லையில் உள்ள மேவாட் பகுதியைச் சேர்ந்த கும்பல், வடமாநிலங்களில் கன்டெய்னர் லாரிகளை திருடி, அதற்குள் காரை மறைத்து தமிழகத்துக்கு கொண்டு வந்து கொள்ளையில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. கொள்ளை முடிந்ததும் காரில் தப்பிச் சென்று சொந்த ஊரில் பதுங்குவதாக கூறப்படுகிறது.
மேலும் மேவாட் பகுதியில் ஏடிஎம் இயந்திரங்களை உடைப்பது, கருவிகளைப் பயன்படுத்துவது உள்ளிட்டவற்றில் தனித்தனி குழுக்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுவதாகவும், சில குழுக்களில் 18 வயதுக்குக் குறைவான சிறுவர்களை அவர்கள் பயன்படுத்துவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.