சென்னை: சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த காயத்ரி (38) என்பவர், கடந்த 2023-ம் ஆண்டு கும்பகோணம் சென்றிருந்தார். அங்கு, பிரசன்னம் பார்த்து குடும்பப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதாக விளம்பரம் செய்திருந்த ராமநிரஞ்சன் (45) பற்றித் தெரிந்து கொண்டார்.
இவர், அகில பாரத இந்து மகா சபாவின் ஆலய பாதுகாப்புப் பிரிவு மாநில பொதுச் செயலாளராக உள்ளார். இதையடுத்து, சென்னை திரும்பிய காயத்ரி, தனது குடும்பப் பிரச்சினைகள் குறித்து ராமநிரஞ்சனிடம் செல்போனில் பேசியுள்ளார்.
அவரது வங்கிக் கணக்குக்கு ரூ.5 ஆயிரம் அனுப்பியுள்ளார். அதன்பிறகு, காயத்ரியை அடிக்கடி தொடர்புகொண்டு அவரது குடும்பப் பிரச்சினைகள் குறித்து ராமநிரஞ்சன் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, வீட்டில் தோஷங்கள் இருப்பதாகவும், அவற்றை நிவர்த்தி செய்யாவிட்டால் குடும்பத்தில் யாருக்காவது உயிரிழப்பு ஏற்படும் என்றும் கூறி அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதை நம்பிய காயத்ரி, தனது வங்கிக் கணக்கு மட்டுமின்றி, கணவர் மற்றும் தாயாரின் வங்கிக் கணக்குகள் மூலமாக பல்வேறு தவணைகளில் ரூ.50.14 லட்சம் வரை அனுப்பியுள்ளார்.
இதன்பிறகும், காயத்ரிக்கு தாலி தோஷம் இருப்பதாகக் கூறிய ராமநிரஞ்சன், அவரது தங்கத் தாலியை விற்பனை செய்ய வைத்து அதன் மூலம் கிடைத்த ரூ.6 லட்சத்தையும் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த காயத்ரி, சென்னை பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி வழக்குப் பதிவு செய்த போலீஸார் அதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் ராமநிரஞ்சனை கும்பகோணம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் திருநீலக்குடி போலீஸார் உதவியுடன் பழவந்தாங்கல் போலீஸார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.