க்ரைம்

பெரம்பலூரில் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதி 4 பெண்கள் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

பெரம்பலூர்: கடலூர் மாவட்டத்திலிருந்து திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு தைப்பூசத்தையொட்டி பாதயாத்திரை சென்ற 4 பெண்கள் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் கார் மோரி உயிரிழந்தனர்.

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த தொளார்குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி மலர்க்கொடி(35). அதே ஊரைச் சேர்ந்த திருநாவுக்கரசு மனைவி சசிகலா(47), சுப்பிரமணி மனைவி விஜயலட்சுமி(40), பரமசிவம் மனைவி ஜோதிலட்சுமி(57), சேலம் மாவட்டம், கெங்கவல்லி கிராமத்தைச் சேர்ந்த மருதமுத்து மனைவி சித்ரா (40) இவர்கள் உள்பட பலரும் தைப்பூசத்தையொட்டி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பாதயாத்திரையாக சென்று கொண்டு இருந்தனர்.

          

இன்று (ஜன. 31) அதிகாலை 5 மணி அளவில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அடுத்த சிறுவாச்சூர் பகுதியில் சமயபுரம் நோக்கி சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்த ஒரு கார், சாலையோரம் பாதயாத்திரை சென்ற பெண் பக்தர்கள் மீது மோதியது.

இந்த விபத்தில் தொளார் குடிக்காட்டைச் சேர்ந்த மலர்கொடி, சசிகலா, விஜயலட்சுமி, ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். தகவலறிந்து நெடுஞ்சாலை ரோந்து போலீஸார் மற்றும் பெரம்பலூர் டவுன் போலீஸார் விரைந்து சென்று படுகாயமடைந்த சித்ரா, ஜோதிலட்சுமி ஆகியோரை மீட்டு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவர்களில் சித்ரா செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். ஜோதிலட்சுமி பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவலறிந்து வந்த பெரம்பலூர் போலீஸார் உயிரிழந்த மலர்கொடி, சசிகலா, விஜயலட்சுமி, சித்ரா ஆகிய 4 பேரின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து பெரம்பலூர் டிஎஸ்பி ஆரோக்கியராஜ் வழக்குப் பதிவு செய்து, அதிகாலையில் காரை அதிவேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக சென்னை, திரிசூலம், ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்த சுரேஷ் மகன் கௌதம் (24) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT