சுசில் | புவனேஷ் | ஹரீஷ் |
திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, பெரியார் நகரைச் சேர்ந்தவர் யுவராஜ் என்கிற ராஜா(46). திருத்தணி பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் இவருக்கு துர்கா என்ற மனைவி, 2 மகள்கள் உள்ளனர்.
கடந்த 4-ம் தேதி மாலை ராஜா வீட்டில் குடும்பத்தினருடன் இருந்தார். அப்போது அங்கு பைக்கில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள், ராஜாவை பட்டாக் கத்தியால் வெட்டிக் கொலை செய்தனர். இதுகுறித்து திருத்தணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து, திருத்தணி, பெரியார் நகரைச் சேர்ந்த சுசில் (27), அரக்கோணத்தைச் சேர்ந்த புவனேஷ் (20), ஹரீஷ் (19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
கைதானவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் தெரிய வந்ததாவது: ராஜாவின் இளைய மகள், திருத்தணி அருகே உள்ள தாளவேடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பேசி வந்துள்ளார். அந்த பெண்ணை திருத்தணி, இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆகவே அச்சிறுவன், கடந்த 10 நாட்களுக்கு முன்பு, திருத்தணி, பெரியார் நகரைச் சேர்ந்த லாரன்ஸ் (31), அவரது தம்பி சுசில் (27), சுசில் மனைவி ரோஸி (25) ஆகியோருடன் சேர்ந்து, ராஜாவின் மகளுடன் பேசி வந்த இளைஞரை தனியாக அழைத்துச் சென்று தாக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல், ராஜாவின் மகளுக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
தன் மகளுக்கு கொலை மிரட்டல் விடப்பட்டது தொடர்பாக ராஜாவின் மனைவி அளித்த புகாரின் பேரில் திருத்தணி போலீஸார், வழக்குப்பதிவு செய்து கடந்த 4-ம் தேதி லாரன்ஸை கைது செய்தனர். இதற்கு பழி வாங்கும் வகையில், லாரன்ஸின் தம்பி சுசில் தூண்டுதலின் பேரில், சுசிலின் நண்பர்களான புவனேஷ், ஹரீஷ் ஆகிய இருவர் ராஜாவை கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இக்கொலை சம்பவம் நடைபெற, சுசிலின் மற்றொரு நண்பரான 17 வயது சிறுவன் பட்டாக்கத்தியை அளித்து உதவியுள்ளார் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸார் கைது செய்ய முயன்றபோது, தப்பியோட முயன்ற சுசிலுக்கு காலில் காயம் ஏற்பட்டது. ஆகவே சுசில் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.