சென்னை: தமிழக முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த, முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். சென்னை, எழும்பூரில் உள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்று போன் அழைப்பு ஒன்று வந்தது.
எதிர் முனையில் பேசிய நபர், “முதல்வர் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளேன். அது சற்று நேரத்தில் வெடித்து சிதறும்'’ எனக் கூறி, இணைப்பை துண்டித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீஸார், உடனடியாக இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.
இதையடுத்து, தேனாம்பேட்டை போலீஸார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் ஆழ்வார்பேட்டை, சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் சோதனை நடத்தினர்.
எனினும், சந்தேகத்துக்கிடமான எந்த பொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை. எனவே, புரளியை கிளப்பும் வகையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் மிரட்டல் வந்த செல்போன் எண் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான பாலமுருகன் (43) என்பது தெரியவந்தது.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இவரை விட்டு மனைவி பிரிந்து சென்றுள்ளார். அந்த விரக்தியில் மதுபோதையில் இதுபோன்று மிரட்டல் விடுத்தது தெரிய வந்ததாக போலீஸார் தெரிவித்தனர். பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், 2 முறை ஏற்கெனவே பாலமுருகன் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.