க்ரைம்

வாடிக்கையாளர்களைப் போல் நடித்து சூப்பர் மார்க்கெட்டில் திருடிய 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது

தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டியது அம்பலம்

செய்திப்பிரிவு

சென்னை: சூப்​பர் மார்க்​கெட்​டில் வாடிக்​கை​யாளர்​களைப் போல் நடித்து நூதன முறை​யில் திருடிய 2 பெண்கள் உட்பட 5 பேரை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். சென்​னை, அண்ணா நகர் 6-வது அவென்​யூ​வில் பிரபல சூப்​பர் மார்க்​கெட் உள்​ளது.

இந்த கடைக்கு நேற்று முன்​தினம் 2 பெண்கள் உட்பட 5 பேர் வந்​தனர். அவர்​கள் நீண்ட நேரத்​துக்கு பிறகும் எந்த பொருட்​களை​யும் வாங்​காமல் சென்​றனர். ஆனால் சூப்​பர் மார்க்​கெட்​டில் இருந்த பொருட்​கள் காணா​மல் போனது தெரிய​வந்​தது.

          

சந்​தேகத்​தின்​பேரில் கடை நிர்​வாகத்​தினர் சிசிடிவி கேமரா காட்​சிகளை ஆய்வு செய்​தனர். இதில் கடைக்கு வாடிக்​கை​யாளர்​கள் போல் வந்த 5 பேரும் டீத்​தூள், எண்​ணெய் பாக்​கெட்​டு​கள் மற்​றும் மளி​கைப் பொருட்​களை தங்​களது உள்​ளாடைக்​குள் மறைத்து வைத்​துக் கொண்​டு, கடையி​லிருந்து வெளி​யேறியது தெரிய​வந்​தது.

இதே​போல, அண்ணா நகர் 3-வது அவென்​யூ​வில் உள்ள அதே சூப்​பர் மார்க்​கெட் கிளை​யிலும் இதே பாணி​யில் பொருட்​கள் திருடப்​பட்​டன.

பெரிய பாக்கெட் பாவாடை: இதையடுத்து இந்த 2 விவ​காரம் தொடர்​பாக அண்​ணாநகர் காவல் நிலை​யத்​தில் புகார் அளிக்​கப்​பட்​டது. அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர்.

இதில் திருட்​டில் ஈடு​பட்​டது தேனி மாவட்​டம் கம்​பம், உத்​தம​பாளை​யத்​தைச் சேர்ந்த லட்​சுமி என்ற நாகலட்​சுமி (50), அதே பகு​தி​யைச் சேர்ந்த நாகம்​மாள் என்ற நாகு (70) என்​பது தெரிந்​தது.

இவர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர். இதையடுத்​து, தலைமறை​வாக இருந்த மதுரை மாவட்​டம், திரு​மங்​கலத்​தைச் சேர்ந்த முரு​கன் (58), அதே மாவட்​டம், கோவில்​பாப்​பாகுடியைச் சேர்ந்த கரண்​கு​மார் (25), வேலூர் மாவட்​டம், கோண வட்​டத்​தைச் சேர்ந்த முதார்​சீர் (40) ஆகிய மேலும் 3 பேரை கைது செய்தனர்.

விசா​ரணை​யில், இவர்​கள் 5 பேரும் 10 வருடங்​களுக்​கும் மேலாக, தமிழகம் முழு​வதும் பல இடங்​களில் இது​போல சூப்​பர் மார்க்​கெட்​டு​களில் பொருட்​களை திருடி​யுள்​ளது தெரிந்​தது. இதற்​காக பெரிய அளவி​லான பாக்​கெட்​டு​களு​டன் பாவாடைகளை வைத்​துள்​ளனர்.

சமீபத்​தில் சென்​னைக்கு வந்​து, வடபழனி​யில் உள்ள ஒரு லாட்​ஜில் தங்​கி, வடபழனி, அண்ணா நகர் மற்​றும் பல இடங்​களில் உள்ள சூப்​பர் மார்க்​கெட்​டு​களில் திருடி​யுள்​ளனர்.

திருடிய பொருட்​களை தங்​களது சொந்த ஊருக்கு டிராவல்ஸ் மூலம் பார்​சல்​களில் அனுப்பி விற்​பனை செய்து வந்​ததும் விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது. அவர்​களிட​மிருந்து குற்​றச் செயலுக்கு பயன்​படுத்​திய கார், கத்தி உள்​ளிட்​டவை பறி​முதல் செய்​யப்​பட்​டன.

SCROLL FOR NEXT