க்ரைம்

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளி ஒருவர் தீக்காயம்

இ.மணிகண்டன்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கிய தொழிலாளி ஒருவர் 80 சதவீதம் தீக்காயமடைந்தார்.

சாத்தூர் அருகே உள்ள முத்துசாமிபுரத்தில் சுந்தர் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் 10-க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர். மூலப்பெருள் கலவையின்போது திடீரென உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. இதில், பட்டாசு மூலப்பொருள் கலவை செய்யப்பட்ட அறை ஒன்று இடிந்து சேதமடைந்தது. அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த காக்கிவாடன்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி (61) என்பவர் 80 சதவிகிதம் தீக்காயம் அடைந்தார்.

தகவலறிந்த ஆலங்குளம் போலீஸார் மற்றும் வெம்பக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். மேலும், காயமடைந்த சுப்பிரமணியை மீட்கப்பட்டு 108 ஆம்புலென்ஸ் மூலம் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

இதனிடையே, விபத்து குறித்து ஆலங்குளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT