க்ரைம்

சாத்தூரில் சட்ட விரோதமாக பட்டாசு திரி தயாரித்தபோது தீ விபத்து: அசாம் சிறுவர்கள் இருவர் உயிரிழப்பு

அ.கோபால கிருஷ்ணன்

சாத்தூர்: சாத்தூர் அருகே தோட்டத்தில் சட்ட விரோதமாக பட்டாசு திரி உற்பத்தி செய்தபோது மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நத்தத்துபட்டியைச் சேர்ந்தவர் சரவணன் (45). திமுக நிர்வாகி. இவர் கே.மேட்டுப்பட்டி சிறுகுளத்தில் உள்ள தனது விவசாய தோட்டத்தில் மனைவி கவிதா பெயரில் உரிமம் பெற்று மினரல் வாட்டர் பிளானட் நடத்தி வருகிறார். அங்கு அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

வாட்டர் பிளான்டிற்கு அமைத்த தகர செட்டில் மிஷின் மூலம் பட்டாசுக்கு தேவையான கருந்திரி உற்பத்தி செய்து வந்தனர். இதில் வடமாநில சிறுவர்கள் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதால் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஷபிகுல் அலி(14), ஷகீல் உசேன்(15) ஆகிய இரு சிறுவர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.

தகவலறிந்து வந்த சாத்தூர் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து, இறந்தவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் விருதுநகர் எஸ்பி கண்ணன் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். விபத்து குறித்து அப்பையநாயக்கன்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT