திருவண்ணாமலை வனச்சரகர் அலுவலகத்துக்கு விசாரணைக்காக வந்த சின்னத்திரை நடிகர்கள் அர்ச்சனா, அருண் பிரசாத்.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள தீப மலை உச்சியில் தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும்.
வனப்பகுதியின் நடுவே இந்த மலை உள்ளதால் இந்த மலை வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மலைமீது செல்வதற்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மலை மீது ஏற வனத்துறையினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் சின்னத்திரை நடிகையான அர்ச்சனா ரவிச்சந்திரன் மற்றும் சின்னத்திரை நடிகரான அருண்பிரசாத் ஆகியோர் தடையை மீறி தீப மலை உச்சிக்கு இருவரும் சென்று வந்துள்ளனர்.
இருவரும் மலைமீது சென்றது குறித்து புகைப்படம் மற்றும் வீடியோக்களை அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார். மேலும், அதில் பொதுமக்களை மலை ஏறுவதை துண்டும் வகையிலான கருத்துக்களையும் பதிவு செய்திருந்தார்.
இது சமூக வலைதளங்களில் பரவியதால் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட வன அலுவலர் சுதாகர், தடையை மீறி மலை மீது ஏறிய சின்னத்திரை நடிகர்கள் அர்ச்சனா ரவிச்சந்திரன் மற்றும் அருண்பிரசாத் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வனத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, வனத்துறையினர் அவர்கள் இருவரையும் நேற்று திருவண்ணாமலை வனச்சரக அலுவலகத்துக்கு விசாரணைக்காக வரவழைத்தனர். அப்போது, அவர்களிடம் வனத்துறையினர் நடத்திய விசாரணையில், இருவரும் தடையை மீறி மலை மீது ஏறியதை ஒப்புக்கொண்டு வனத்துறையினரிடம் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தனர்.
இதையடுத்து, வனத்துறையினர் இருவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும், அர்ச்சனா ரவிச்சந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்த வீடியோ, புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது.