ஹேமாவதி
பூந்தமல்லி: பெண் தூய்மைப் பணியாளர் கொலை செய்யப்பட்டு, 8 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக இளைஞரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி, மற்றொருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு, அன்னலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமாவதி(55). இவர், பெருநகர சென்னை மாநகராட்சியின் வளசரவாக்கம் மண்டலத்தில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வந்தார்.
இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்; மகன் மணிகண்டன் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். இதனால் தனியாக வசித்து வந்த ஹேமாவதி, கடந்த 2 தினங்களாக வீட்டிலிருந்து வெளியே வராத நிலையில் நேற்று காலை அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது.
இதுகுறித்த புகாரின் பேரில் திருவேற்காடு போலீஸார் சம்பவ இடம் விரைந்து, ஹேமாவதியின் வீட்டைத் திறந்து பார்த்தபோது, ஹேமாவதி உடல் அழுகிய நிலையில் கிடந்தது தெரிய வந்தது.
இதையடுத்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில், ஹேமாவதியின் வீட்டுக்கு கடைசியாக வந்து சென்றவர்கள், அதே பகுதியைச் சேர்ந்த நித்திஷ் (25), அவரது நண்பரான, விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரை சேர்ந்த ஆகாஷ் (30) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் நித்திஷ் சிக்கினார். அவரிடம் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.நித்திஷிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாவது:
திருவேற்காடு, அன்னலட்சுமி நகர் பகுதியில் உள்ள ஒரு கோயிலுக்கு உடுக்கை அடிக்க சமீபத்தில் ஆகாஷ் வந்துள்ளார்.
இதனையறிந்த ஹேமாவதி, தான் கட்டியுள்ள கோயிலுக்கும் ஆகாஷை உடுக்கை அடிக்க அழைத்து வருமாறு நித்திஷிடம் கேட்டுள்ளார்.
ஹேமாவதி தனியாக இருப்பதையும், அவரிடம் அதிக நகைகள் இருப்பதையும் அறிந்த நித்திஷ், ஆகாஷுடன் சேர்ந்து அவற்றை திருட திட்டமிட்டார்.
அதன்படி ஆகாஷ், நித்திஷ் இருவரும், 2 தினங்களுக்கு முன்பு ஹேமாவதி வீட்டுக்குள் நுழைந்து, அவரது முகத்தை தலையணையால் அழுத்தி கொலை செய்துவிட்டு, 8 பவுன் நகையை திருடிச் சென்றுள்ளனர்.
இவ்வாறு விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் கூறினர். ஆகவே நகைகளுடன் தலைமறைவாக உள்ள ஆகாஷை தனிப்படை அமைத்து போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆகாஷ் கைது செய்யப்பட்ட பிறகுதான் முழுமையான விவரங்கள் தெரியவரும் என, போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.