ஷீலா மேரி, பிரபுமணி
சென்னை: குறைந்த விலையில் தங்கம் என ரூ.20 கோடி வரை மோசடி நடைபெற்ற விவகாரத்தில் பெண் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ராயபுரம் மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றியவர் ஷீலா மேரி. இவர் தனது உறவினரான பிரபு மணி மூலமாக ஒரு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் தங்கத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம், குறைந்த விலையில் தங்க காசுகள் வாங்கலாம், வீட்டு மனைகள் குறைந்த விலையில் வாங்கித் தருகிறோம் என பல்வேறு முதலீட்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளார்.
கடந்த 2023 மற்றும் 2024-ம் ஆண்டு வரை 200-க்கும் மேற்பட்டோர் பிரபு மணி நடத்தி வந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். பிரபு மணி பெரும்பாலும் ஆய்வாளர் ஷீலா மேரியின் காவல்துறை வாகனத்திலேயே வைத்து, மக்களவைத் தேர்தல் நேரத்தில் தங்கக் காசுகளை வழங்கியுள்ளார்.
இதனால் நம்பிக்கை ஏற்பட்டு மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் முதலீடு செய்துள்ளனர். குறிப்பாக போலீஸாரும், போலீஸ் அதிகாரிகள் பலரும் கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்நிறுவனத்தை 2024 இறுதியில் மூடிவிட்டு பிரபுமணி தலைமறைவாகிவிட்டார். இவரிடம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டவர்கள் சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தனர்.
மொத்தம் ரூ.20 கோடி வரை இழந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து முதல் கட்டமாக பிரபுமணி மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர். தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
பெண் காவல் ஆய்வாளர் ஷீலா மேரியும் மோசடிக்கு உடந்தையாக இருந்தது உறுதி செய்யப்பட்டதால், அவர் மீதும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், தங்க நகை மோசடி வழக்கு விவகாரத்தில் சிக்கிய காவல் ஆய்வாளர் ஷீலா மேரியை பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.