ராஜேஸ்வரி

 
க்ரைம்

பொன்னேரி மருத்துவமனை பெண் ஊழியர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு

வாகன ஓட்டுநரால் தீ வைக்கப்பட்ட சம்பவம்

இரா.நாகராஜன்

பொன்னேரி: பொன்னேரி அரசு மருத்துவமனை வளாகத்தில் வாகன ஓட்டுநரால் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட தற்காலிக பெண் ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள உப்பரபாளையத்தைச் சேர்ந்த வினோத் என்பவரின் மனைவி ராஜேஸ்வரி (34). இவர் பொன்னேரி அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை கணினி பிரிவில் கடந்த 8 மாதங்களாக தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

வழக்கம்போல் கடந்த மாதம் 21-ம் தேதி மாலை பணி முடிந்து, வீடு திரும்புவதற்காக ராஜேஸ்வரி மருத்துவமனையில் இருந்து வெளியே வந்துள்ளார். மருத்துவமனை வளாகத்தில் நடந்து சென்று கொண்டிருந்த ராஜேஸ்வரி மீது மர்ம நபர் ஒருவர் தான் கேனில் கொண்டுவந்த பெட்ரோலை ஊற்றியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி, மர்ம நபரிடம் இருந்து தப்புவதற்காக மருத்துவமனைக்குள் ஓடி செல்ல முயன்றார். அவரை பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர், ராஜேஸ்வரி மீது தீ வைத்துவிட்டு தப்பியோடினார்.

இதில், உடலின் பல்வேறு பகுதிகளில் தீக்காயமடைந்த ராஜேஸ்வரி, மருத்துவமனை ஊழியர்களால் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து முதலுதவி சிகிச்சை பெற்ற ராஜேஸ்வரி, மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இதற்கிடையே, ராஜேஸ்வரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொன்னேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், ராஜேஸ்வரி மீது பெட்ரோல் ஊற்றியது பொன்னேரி அடுத்த மாதவரம் பகுதியை சேந்த வாகன ஓட்டுநர் பிரகாஷ் என்பதும், இவருக்கும் ராஜேஸ்வரிக்கும் தவறான நட்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், ஒரு கட்டத்தில் பிரகாஷுடனான நட்பை ராஜேஸ்வரி துண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ், ராஜேஸ்வரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்றது தெரியவந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையடுத்து, பொன்னேரி அருகே மாதவரம் அடுத்த பெருஞ்சேரி கிராமத்தில் உள்ள மயான பகுதியில் பதுங்கி இருந்த பிரகாஷை, கடந்த மாதம் 22-ம் தேதி அதிகாலை பொன்னேரி போலீஸார் சுற்றி‌ வளைத்து கைது செய்ய முயன்றனர். அப்போது பிரகாஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் உதவி காவல் ஆய்வாளர் தமிழரசனை வெட்டி விட்டு தப்பியோட முயன்றார்.

இதனால், தற்காப்புக்காக காவல் ஆய்வாளர் சிவகுமார், துப்பாக்கியால் பிரகாஷின் வலது காலின் முட்டிக்கு கீழ் சுட்டார். துப்பாக்கிக் குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்த பிரகாஷை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து, மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு பிரகாஷை, போலீஸார் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ராஜேஸ்வரி, நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, பிரகாஷ் மீது பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கை, போலீஸார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT