க்ரைம்

திருட்டு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தங்களின் பாகங்கள் ஐகோர்ட் உத்தரவுப்படி எரிப்பு

செய்திப்பிரிவு

வனத்துறை வசம் உள்ள யானைத் தந்தங்களின் பாகங்கள் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, கும்மிடிப்பூண்டியில் உள்ள எரியூட்டு மையத்தில் எரிக்கப்பட்டது.

பல்வேறு திருட்டு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட யானைத் தந்தங்கள் வனத்துறை சார்பில், வண்டலூர் மிருகக்காட்சி சாலையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வனம் மற்றும் வனப் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதிகள் என்.சதீஷ்குமார். டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு, தற்போது கையிருப்பில் உள்ள யானைத் தந்தங்களின் பாகங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வனத்துறைக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

          

மேலும், அந்த தந்தங்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து அவற்றின் உயரம், எடை, சுற்றளவை அளந்து, இறந்த யானைகளை உறுதிப்படுத்தும் வகையில், டிஎன்ஏ பரிசோதனைக்காக மாதிரி துண்டுகளை மட்டும் வைத்துக் கொண்டு எஞ்சிய தந்தங்களின் பாகங்களை உரிய முறையில் எரித்து அவற்றை அழிக்கலாம் என உத்தரவிட்டிருந்தது.

வனத்துறை வசம் 233 தந்தங்கள்: அதன்படி, இந்த வழக்கு மீண்டும் இதே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வனத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் டி.சீனிவாசன், தற்சமயம் வனத்துறை வசம் 233 தந்தங்கள் உள்ளதாக தெரிவித்தார். அதையடுத்து நீதிபதிகள், இந்த தந்தங்களின் மாதிரி துண்டுகளை மட்டும் பாதுகாப்பாக வைத்துக் கொண்டு மற்றவற்றை கும்மிடிப்பூண்டியில் உள்ள எரியூட்டு மையத்தில் வைத்து முழுமையாக அழிக்க வேண்டும்.

இந்நிகழ்வின் போது, உயர் நீதிமன்றத்துக்கு உதவும் வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் டி.மோகன் மற்றும் வழக்கறிஞர்கள் செவனன் மோகன், ராகுல் பாலாஜி, எம்.சந்தானராமன், வனத்துறை சிறப்பு அரக வழக்கறிஞர் டி.சீனிவாசன், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர், உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்டோர் உடனிருக்க வேண்டும் என, உத்தரவிட்டிருந்தனர்.

எரிக்கும் பணி தொடக்கம்: அதன்படி, இந்த யானை தந்தங்கள் கும்மிடிப்பூண்டி எரியூட்டு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அவற்றை எரிக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த யானை தந்தங்களை மொத்தமாக ஒரே நேரத்தில் எரிக்க முடியாது என்பதால் சிறிது, சிறிதாக எரிக்க வனத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT