சென்னை: மீண்டும் பணியில் சேர பணியிட உத்தரவு வழங்குவதற்காக, ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக, மின்வாரிய அலுவலக உதவியாளர் ஒருவரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர். தமிழ்நாடு மின்வாரிய (பெசன்ட்நகர்) உதவி பொறியாளர் பாலசுப்பிரமணியன் என்பவர், கடந்த 2023 செப்.23 அன்று ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான வழக்கு, விசாரணையில் இருந்து வருகிறது. இதற்கிடையில், அவருக்கு விதிக்கப்பட்ட பணியிடை நீக்க (சஸ்பெண்ட்) உத்தரவை அடையாறு மேற்பார்வை பொறியாளர் கடந்த 2026 ஜூன் 12-ம் தேதியன்று ரத்து செய்ததாக கூறப்படுகிறது.
ஆனால், மீண்டும் பணியில் சேருவதற்கான பணியிட உத்தரவை, சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை பொறியாளர் (பணியாளர் பிரிவு) அலுவலகம் மூலம் வழங்க வேண்டியிருந்தது.
இந்நிலையில், பணியிட உத்தரவு பெற்றுத் தருவதற்காக, தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்கு நடவடிக்கை பிரிவில் உதவியாளராக பணியாற்றும் பாலாஜி என்பவர், பாலசுப்பிரமணியனிடம் ரூ.1.50 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. பின்னர், பேச்சுவார்த்தையில் அந்த தொகை ரூ.1.30 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.
இதில், முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் லஞ்சப் பணத்தை நேற்று வழங்குமாறு பாலாஜி கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து, பாலசுப்பிரமணியன் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸில் புகார் அளித்தார்.
இதையடுத்து, அதிகாரிகள் ஏற்பாடு செய்த சோதனை நடவடிக்கையின் போது, சென்னை, அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் பாலாஜி, புகார்தாரரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் லஞ்சப் பணத்தை நேற்று பெற்றுள்ளார்.
அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.