க்ரைம்

கொடுங்கையூரில் தொழிலாளியை கத்தியால் குத்திய 8 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: கொடுங்கையூரில் நண்பன் எங்கே என்று கேட்டு தொழிலாளியை கத்தியால் குத்திய வழக்கில், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உட்பட 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை கொடுங்கையூர், ரிக் ஷா காலனி, எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி அருள்ராஜ் (26), கடந்த 23-ம் தேதி இரவு வேலை முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். எம்ஜிஆர் நகர் 4-வது தெரு, அண்ணாசாலை அருகே அவர் வரும்போது, அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், அவரது அண்ணன் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட 9 பேர் கொண்ட கும்பல் அவரது வாகனத்தை வழிமறித்தது.

அருள்ராஜிடம், "உனது நண்பன் சூர்யா எங்கே?" என்று கேட்டு அக்கும்பல் தகராறில் ஈடுபட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அவர்கள் அருள்ராஜை கையாலும், கத்தியாலும் கடுமையாகத் தாக்கினர். அருள்ராஜின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவரவே, அக்கும்பல் கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச்சென்றது.

காயமடைந்த அருள்ராஜ் உடனே ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில், கொடுங்கையூர் போலீஸர் கொலை முயற்சி உள்ளிட்டப் பிரிவு களின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் (26), பிரசாந்த் (26), மணிகண்டன் (எ) கஞ்சா மணி (26), முகமது ரசூல்லா (27), கணேசன் (21), தனுஷ் ( 18) உதயகுமார் (எ) கபாலி (30), பாலாஜி (28) ஆகிய 8 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 கத்தி கள் பறிமுதல் செய்யப்பட்டன.

SCROLL FOR NEXT