க்ரைம்

லஞ்ச வழக்கில் கைதான விருதுநகர் சுகாதாரத் துறை துணை இயக்குநரின் வீட்டில் சோதனை

ரூ.1.50 கோடி மதிப்பிலான ஆவணங்கள் பறிமுதல்

பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்: விருதுநகர் மாவட்டத்தில் கைதான சுகாதாரத் துறை துணை இயக்குநர் ஜெகவீரபாண்டியனின் சின்னாளபட்டி வீட்டில், திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் திடீர் சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெகவீரபாண்டியன். ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர், தற்போது விருதுநகர் மாவட்டத்தில் சுகாதாரத் துறை துணை இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம் ஜெகவீரபாண்டியன் ஒப்பந்த வாகனத்துக்கு வாடகை தொகையை விடுவிக்க லஞ்சம் பெற்றபோது விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து ஜெகவீரபாண்டியனின் வீடு உள்ள திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை காவல் ஆய்வாளர் ரூபா கீதா ராணி தலைமையில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின்போது ரூ.1.50 கோடி மதிப்பில் தங்க நகைகள் வாங்கியுள்ளதற்கான ஆவணங்கள் சிக்கியது. ரசீதுக்குரிய நகைகள் அனைத்தும் வங்கி லாக்கரில் இருப்பதாக ஜெகவீரபாண்டியனின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இதனை அடுத்து, நகைகளுக்கான ரசீதுகளையும், வங்கி லாக்கருக்கான சாவியையும் போலீஸார் கைப்பற்றினர். ரூ.1.50 கோடிக்கான நகைகளையும், ஜெகவீரபாண்டியன் தனது மகள் பெயரில் வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

கல்லூரி மாணவியான அவருக்கு வருமானம் இல்லாத நிலையில், அவரது பெயரில் நகைகளை வாங்கி ஜெகவீரபாண்டியன் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

SCROLL FOR NEXT