சென்னை: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து பயணிகள் விமானம் சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தனர்.
அப்போது வந்த சென்னையைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்றுவிட்டு வந்த அவர் கொண்டு வந்திருந்த சூட்கேசை திறந்து அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதில் இருந்த தாய்லாந்து நாட்டு உணவுப் பொருட்கள் பாக்கெட்டுகளை பிரித்து சோதனை செய்த போது, அதில் ரூ.5.26 கோடி மதிப்புள்ள 15 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த இளைஞரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.