புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா செய்தியாளர்களிடம் நேற்று இரவு கூறியதாவது: புதுக்கோட்டை நகர டிஎஸ்பி இரா.பிருந்தா தலைமையிலான போலீஸார், டிவிஎஸ் கார்னர் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்துக்கு இடமான வகையில் 4 பேர் அட்டைப் பெட்டிகளுடன் சாலையோரத்தில் நின்றிருந்தது தெரியவந்தது.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் போதை மாத்திரைகளை இலங்கைக்கு கடத்த இருந்ததும், வாகனம் ஒன்றுக்காக காத்திருந்ததும் தெரியவந்தது.
4.82 லட்சம் மாத்திரைகள்: இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த ஆம்ஸ்ட்ராங்(33), அமல்ராஜ்(37), பிரதாப்(35), சந்தியா(36) ஆகியோரைப் போலீஸார் கைது செய்தனர். மேலும், அவர்கள் 7 பெட்டிகளில் வைத்திருந்த, ரூ.9 கோடி மதிப்பிலான 4.82 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த மாத்திரைகளில் உற்பத்தி செய்யப்பட்ட இடம் குறித்த விவரங்கள் இல்லை. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.