திருச்சி சூர்யா

 
க்ரைம்

யூடியூப் சேனலில் பெண்ணை இழிவாகப் பேசியதாக திருச்சி சூர்யா கைது

வெற்றி மயிலோன்

சென்னை: யூடியூப் சேனலில் பெண்ணை இழிவுப்படுத்தி காணொளி வெளியிட்டு அவதூறு பரப்பிய வழக்கில் திருச்சி சூர்யா சென்னை மத்திய குற்றப் பிரிவு சைபர் க்ரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து சென்னை காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை பெருநகர காவல் துறையின் மத்திய குற்றப் பிரிவின் சைபர் குற்ற காவல் நிலையத்தின் சமூக ஊடக விசாரணைப் பிரிவு, பெண் ஒருவரின் கண்ணியத்தையும் தனியுரிமையையும் இழிவுபடுத்தும் வகையில் ஆபாச மற்றும் பாலியல் ரீதியான கருத்துகளை இணையதளத்தில் வெளியிட்ட வழக்கில் ஒருவரை கைது செய்துள்ளது.

சென்னை மாநகரைச் சேர்ந்த பெண் ஒருவர் பெருநகர சென்னை காவல் ஆணையரிடம் இது குறித்து 03.06.2026 அன்று புகார் அளித்தார். இவரது புகாரின் அடிப்படையில், "MY INDIA 24x7" என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்ட காணொளியில், அவரையும் அவரது புதிதாக பிறந்த இரட்டை குழந்தைகளையும் குறித்து ஆபாசமான, இழிவான மற்றும் பாலியல் ரீதியான கருத்துகள் தெரிவிக்கப்பட்டதாக புகார் பெறப்பட்டது.

இதுகுறித்து சென்னை மாநகர மத்திய குற்றப் பிரிவு சைபர் குற்ற காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. குற்றச்சாட்டில் தொடர்புடைய திருச்சி சூர்யா (33) இன்று (04.06.2026) கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட திருச்சி சூர்யா, இன்று சைதாப்பேட்டை, பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

சென்னை பெருநகர காவல் ஆணையர், சமூக ஊடகங்கள் மற்றும் இணைய தளங்களில் பெண்களை அவமதிக்கும் வகையிலான ஆபாச, இழிவான அல்லது சட்டவிரோத உள்ளடக்கங்களை வெளியிடுவது கடுமையான குற்றமாகும் என்றும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT