க்ரைம்

‘டீப் ஃபேக்’ மோசடிகள் அதிகரிப்பு: பொது மக்களுக்கு சிபிஐ எச்சரிக்கை

துரை விஜயராஜ்

சென்னை: ‘டீப் ஃபேக்’ எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பணம் பறிக்கும் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொது மக்களுக்கு சிபிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.

வழக்கமாக சைபர் குற்றவாளிகள் ஓடிபி எண்ணைப் பெற்றே பணத்தைக் கையாடல் செய்வார்கள். அதனால் ‘ஓடிபி-யை யாருடனும் பகிர வேண்டாம்’ என வங்கிகளும் காவல்துறையும் தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.

ஆனால், தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்திப் பல்வேறு புதிய வழிகளில் சைபர் மோசடிகள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், ‘டீப் ஃபேக்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தப்படும் மோசடிகள் தற்போது தீயாய் பரவி வருகின்றன.

அந்த வகையில், சைபர் குற்றவாளிகள், நமக்குத் தெரிந்தவர்களின் குரலையோ அல்லது முகத்தையோ செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் அச்சு அசலாக உருவாக்கி, அவசர உதவி கேட்பது போல நம்ப வைத்துப் பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் பணத்தைப் பறித்து வருகின்றனர்.

இத்தகைய நவீன ‘டீப் ஃபேக்’ மோசடிகள் குறித்து பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், முன்பின் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகளை அப்படியே நம்பிப் பணத்தை இழந்துவிட வேண்டாம் என்றும் மத்திய புலனாய்வு முகமை (சிபிஐ) எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக சிபிஐ-யின் எக்ஸ் தள பதிவில், 'செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் ஒருவரின் முகம், குரல் மற்றும் உடல் அசைவுகளை அப்படியே நகலெடுத்து, அவர் செய்யாத ஒரு செயலைச் செய்தது போலவும், பேசாத ஒரு விஷயத்தைப் பேசியது போலவும் போலியான வீடியோக்கள், புகைப்படங்கள் அல்லது ஆடியோக்களை உருவாக்குவதே 'டீப் ஃபேக்' ஆகும்.

இவை பார்ப்பதற்கும் கேட்பதற்கும் உண்மையானவை போலவே இருக்கும். இதனை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் பொதுமக்களின் பணத்தை பறிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே, அதிர்ச்சியூட்டும் அல்லது உணர்ச்சிகரமான வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் ஆடியோக்களை மற்றவர்களுக்குப் பகிரும் முன், அதன் உண்மைத் தன்மையை பொதுமக்கள் நன்கு ஆராய வேண்டும். ஒரு வீடியோ அல்லது குரல் செய்தி பார்ப்பதற்கு உண்மையாகத் தெரிவதால் மட்டுமே அதை அப்படியே நம்பிவிடாதீர்கள். வீடியோ கால் மூலமாகவோ அல்லது அவசரத் தேவை என்று குரல் வழிச் செய்தியாகவோ யாராவது பணம் கேட்டால், அவற்றை உறுதிப்படுத்தாமல் உடனடியாகப் பணத்தை அனுப்பக்கூடாது.

சந்தேகம் ஏற்பட்டால், அந்தச் செயலை உடனடியாக நிறுத்தி, உண்மைத்தன்மையைச் சரி பார்த்து, மோசடி என்று தெரிந்தால் உடனடியாக புகார் அளிக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவால் நம்ப முடியாத அளவுக்குப் போலிகளை உருவாக்க முடியும். உங்கள் விழிப்புணர்வே உங்களுக்கான முதல் பாதுகாப்பு. எதையும் நம்பும் முன் ஒருமுறைக்கு இருமுறை சரிபார்க்கவும்.

பொதுமக்கள் யாரேனும் இணையவழி மோசடியால் பாதிக்கப்பட்டால் ‘1930’ என்ற எண்ணிலோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம்' என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT