க்ரைம்

பெரம்பலூர்: டீ கடையில் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

செய்திப்பிரிவு

பெரம்பலூர்: பெரம்பலூரில் டீ கடையில் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

பெரம்பலூர் காவல் நிலையம் எதிரே அருணாச்சலம் என்பவருக்கு சொந்தமான டீ கடையில் ஆக.11-ம் தேதி வணிக சிலிண்டர் தீ பிடித்து வெடித்தது.

இதில், கடையில் வேலை பார்த்து கொண்டிருந்த சிறு குடலைச் சேர்ந்த டீ மாஸ்டர் தினேஷ்குமார்(33), குறிச்சி நகரைச் சேர்ந்த வேலைக்கார பெண் புவனேஸ்வரி(32), ரங்காநகர் சகாதேவன்(53), பொம்மனபாடி மணிகண்டன்(42), கொட்டரை ஆறுமுகம்(50) மற்றும் பேரளியைச் சேர்ந்த சிறுமி மித்ரா(14) உட்பட 13 பேர் காயம் அடைந்தனர்.

மேலும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த 17 வாகனங்களும் சேதம் அடைந்தன. இந்த தீ விபத்தில் 80 சதவீதத்துக்கும் மேல் தீக்காயமடைந்த மணிகண்டன், தினேஷ்குமார், சகாதேவன், ஆறுமுகம், புவனேஸ்வரி உள்ளிட்ட சிலருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதில், ஆக.13-ல் தேதி மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து, ஆக.15-ல் தினேஷ் குமார், சகாதேவன், 17-ல் கொட்டரையைச் சேர்ந்த ஆறுமுகம் ஆகியோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், சிகிச்சையில இருந்த டீ கடையில் வேலை பார்த்து வந்த புவனேஸ்வரி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதையடுத்து இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து பெரம்பலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT