கோவை: ‘சைபர்’ குற்றங்களின் ‘ஹாட்ஸ் பாட்’ ஆக மாறும் கோவையில், தடுப்பு நடவடிக்கைகளை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
அதிகரித்துவரும் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி மர்ம நபர்கள் பல்வேறு சைபர் கிரைம் மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில வழக்குகளை தவிர, பெரும்பாலான பண மோசடி தொடர்பான சைபர் கிரைம் வழக்குகளில் பிரதான குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டு்ள்ளனர்.
திட்டப் பணிகள் தொடர்பாக ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் மத்திய அரசின் ‘பிரகதி’ கூட்டத்தில், சைபர் கிரைம் குற்றங்களைத் தடுக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, தேசிய அளவில் சைபர் குற்றங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்கள், மாவட்டங்கள் உள்ளிட்டவை குறித்த ‘ஹாட்ஸ்பாட்’ பட்டியல் தயாரிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக கோவை சைபர் கிரைம் போலீஸார் கூறும்போது, ‘‘சைபர் குற்றங்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 7-வது இடத்தில் உள்ளது. மேற்குவங்கம், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா ஆகியவை முதல் மூன்று இடங்களில் உள்ளன. தமிழகத்தில் சைபர்கிரைம் அதிகம் நடக்கும் ஹாட்ஸ்பாட் பட்டியலில் கோவையும் உள்ளது. சைபர் கிரைம் தொடர்பான பணப் பரிமாற்றங்கள் அதிகம் நடைபெறும் மாவட்டமாக ராமநாதபுரம் மாவட்டம் உள்ளது.
கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சைபர் கிரைம் மோசடி கும்பலால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து புகார்களை அளித்து வருகின்றனர். மோசடியில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுகின்றனர்.
நேரடியாகவும், சமூகவலைதளங்கள் மூலமும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. கோவை மாநகர சைபர் கிரைம் பிரிவில் நடப்பாண்டு சைபர் மோசடிகள் தொடர்பாக 7 ஆயிரம் பேர் புகார் அளித்துள்ளனர். ரூ.45 கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளது. அதில், ரூ.2.50 கோடி வரை திரும்பப் பெறப்பட்டுள்ளது. மேலும் ரூ.2 கோடியை திரும்பப் பெற முயற்சி நடக்கிறது’’ என்றனர்.