மதுரை: கடன் அட்டைக்கான தொகையை அதிகரிப்பதாகவும், போக்குவரத்து விதிமீறல் அபராத ரசீது வழங்குவதாகவும் கூறி போலியான இணைய இணைப்பை அனுப்பி ஆன்லைன் மூலம் பணம் பறிப்பது தொடர்பான புகார்கள் அதிகரித்துள்ளதாக மதுரை சைபர் குற்ற போலீஸார் தெரிவித்தனர்.
செல்போன்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பால் சைபர் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. பெரும்பாலும் சமூக வலைதளங்களில் வரும் பல்வேறு குறுந்தகவல்கள், அழைப்புகளின் உண்மைத் தன்மை அறியாமல் அப்பாவி மக்கள் பணத்தை இழக்கின்றனர்.
தவறான நபர்களின் தொடர்பால் பாலியல் ரீதியான தொந்தரவு, சட்டவிரோத தகவல்கள், வீடியோ, புகைப்படங்களைப் பகிர்வதால் பலர் வழக்குகளிலும் சிக்குகின்றனர். அறிமுகமில்லாத நபர்கள் கூறும் ஆசைவார்த்தைகளை நம்பி ஆதார், பான் கார்டு, மொபைல் எண், வங்கி விவரங்களைப் பகிரும்போது சைபர் குற்றத்தில் ஈடுபடும் கும்பல்கள் எளிதில் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தைத் திருடுகின்றனர்.
அண்மைக் காலமாக தலைக்கவசம் அணியாதது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதி மீறல்களால் வழக்குகளில் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் வழக்கில் இருந்து விடுவிப்பதாகவும் கூறி பெயர், வாகன எண், ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களைச் சேகரிக்க வாகன உரிமையாளர்களின் செல்போனுக்கு குறிப்பிட்ட இணைய இணைப்பை அனுப்பி அவர்களின் வங்கி கணக்கில் இருந்து மர்ம நபர்கள் பணத்தைத் திருடுகின்றனர்.
மேலும், கடன் அட்டைகளில் கடன் தொகையை அதிகரிக்கலாம், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது எனக் கூறி இணைய இணைப்பை அனுப்பி விவரம் சேகரித்து மோசடி செய்கின்றனர். தற்போது `டிஜிட்டல் அரஸ்ட்' என்ற பெயரில் குறிப்பிட்ட வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை அனுப்புமாறு மிரட்டி மோசடி செய்வது போன்ற குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. இதுதொடர்பாக மதுரை சைபர் கிரைம் காவல்துறைக்கு வாரத்துக்கு 5 புகார்களுக்கு மேல் வருவதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சைபர் கிரைம் போலீஸார் கூறியது: “ஒவ்வொரு நாளும் சைபர் குற்றங்கள் விதவிதமாக நடக்கின்றன. அப்பாவிகளை எந்த வகையில் ஏமாற்ற முடியும் என்பதைத் தெரிந்து கொண்டு ஏமாற்றுகின்றனர். போக்குவரத்து விதிமீறலுக்கு இணைய வழியில் அபராதம் செலுத்தலாம் என்ற வசதி இருப்பதால் போலி செயலிகள் மூலம் பணம் பறிக்கின்றனர்.
கல்வி உதவித் தொகை, எளிதில் கடன் வசதி, கடன் அட்டையில் தொகையை உயர்த்துவதாகக் கூறியும் மோசடி நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இந்தப் புகார்களை விசாரிக்கும்போது பெரும்பாலும் வடமாநிலம் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தோர்களே அதிகமாக ஈடுபடுகின்றனர்.
இவர்கள் போலியான முகவர்களை பயன்படுத்தி சிம்கார்டுகளை வாங்கி மோசடியில் ஈடுபடுவதும், அடுத்தவரின் வங்கிக் கணக்கை கமிஷன் தருவதாகக் கூறி அதை வாங்கி மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. இதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது போன்று பல்வேறு சமூக வலைதளங்களைப் பயன்படுத்தியே மோசடிகள் செய்யப்படுகின்றன. பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” என்றனர்.