அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க குவிந்த முதலீட்டாளர்கள்.
மதுரை/ திண்டுக்கல்: ஆன்லைன் செயலி மூலம் முதலீடு செய்தால் டாலர் மதிப்பில் அதிக லாபம் பெறலாம் எனக் கூறிதென் மாவட்டங்களில் பொதுமக்களை ஏமாற்றி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக மதுரை அருகே 12 பேரை கைது செய்த போலீஸார் அவர்களின் வங்கிக் கணக்கை முடக்கியுள்ளனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருவாதவூர் அருகிலுள்ள கட்டடையன்பட்டியைச் சேர்ந்தவர் ரஞ்சித். வெளிநாட்டில் வேலை செய்த இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஊர் திரும்பினார். இவரும், இவரது நண்பர் அருணும் ஆன்லைன் செயலி மூலம் எப்.க்யூ.எல், வி.ஜே. என்ற பெயரில் முதலீட்டுத் திட்டங்களை அறிமுகம் செய்தனர்.
ஒரு செயலியில் ரூ.50 ஆயிரமும், மற்றொரு செயலியில் ரூ.1 லட்சமும் முதலீடு செய்தால் அத்தொகை டாலர்களாக மாற்றப்படும். செல்போன்களில் பதிவிறக்கம் செய்துள்ள செயலிக்கு 3 முறை வரும் குறுந்தகவலை `க்ளிக்' செய்வதால் டாலரின் மதிப்பு அதிகரிக்கும் என்று கூறினர்.
இதை நம்பி மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்தனர். இதற்கு எவ்வித ரசீதும், ஆதாரமும் கிடையாது. இவ்வாறு ஆயிரக்கணக்கானோர் பணம் செலுத்தி இணைந்தனர்.
இந்நிலையில் ஆக.20-ம் தேதிக்கு முன்னதாகவே இந்த செயலி முதலீடுக்கான இணைப்பு திடீரென தடைப்பட்டது. ரஞ்சித், அருண் ஆகியோர் தலைமறைவானதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நேற்று முன்தினம் கட்டையன்பட்டியில் ரஞ்சித் வீட்டை பலரும்முற்றுகையிட்டனர். பின்னர் மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மாவட்ட காவல்துறை அறிவுறுத்தலின்பேரில் பாதிக்கப்பட்டோர் மதுரை எஸ்பி அலுவலகம், சைபர் குற்றப்பிரிவு மற்றும் அந்தந்த காவல் நிலையங்களில் பாதிக்கப்பட்டோர் புகார் கொடுத்தனர்.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை மேலூர் அருகே நான்கு வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களை கலைந்து போகச் செய்தனர். மற்றொரு குழுவினர் கட்டையம்பட்டியிலுள்ள ரஞ்சித் வீட்டை முற்றுகையிட்டனர். ஆத்திரத்தில் கற்களை வீசி வீட்டைச் சேதப்படுத்தினர். அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்த முதலீட்டாளர்களும் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: இதுவரை 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முதலீடு செய்திருப்பதாகத் தெரிகிறது. ரூ.1 முதல் 5 லட்சத்துக்கு மேல் முதலீடு செய்து பலர் ஏமாந்துள்ளனர். மோசடிக்கு மூளையாக செயல்பட்ட ரஞ்சித், அவரது நண்பர் அருணை தேடி வருகிறோம். அவர்கள் உள்ளிட்ட சிலர்மீது மதுரை மாவட்ட சைபர் குற்றப்பிரிவில் வழக்குப் பதிந்துள்ளோம். இதுவரை 7 பேரை நேற்று கைது செய்தோம்.
இதனிடையே திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காசம் பட்டி கிராமத்தைச் சேர்ந்த முகவர்கள் ரமேஷ், விஜய் ஆகியோரது வீடுகளின் முன் நேற்று பாதிக்கப்பட்ட மக்கள் முற்றுகையிட்டனர். போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்த நிலையில் அவர்களின் பாதுகாப்பையும் மீறி முகவர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் போலீஸ் வாகனமும் சேதமடைந்தது.