ஓசூர்: ஓசூர் மாநகரில் போதிய காவல் நிலையங்கள் மற்றும் காவலர்கள் இல்லாத நிலையில், அரசியல் செல்வாக்குடன் குற்றங்கள் அதிகரிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், அரசு ஊழியர் மீது காரை ஏற்றிக் கொன்ற வழக்கில் கைதானவர்கள்மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ஓசூர் மாநகராட்சியில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்; மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டும் அடிப்படை கட்டமைப்பு வசதியில் நகராட்சி அளவிலேயே உள்ளது.
ஓசூர் கர்நாடக, ஆந்திர மாநிலத்தையொட்டி உள்ளதால் கொலைகள், கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் மாவட்டத்திலேயே இங்கு அதிகம் நடைபெறுகிறது. மாவட்டத்தில் 526 ரவுடிகள் காவல்துறை பட்டியலில் உள்ளனர்.
இதில் ஓசூரில் 100- க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். ஓசூர் மாநகரமாக தரம் உயர்ந்தபோதும், குற்றங்களை தடுக்க போதிய போலீஸார் இல்லை. இதனால், இங்கு குற்றங்களில் ஈடுபடுவோர் எளிதாக அண்டை மாநிலங்களுக்கு தப்பிச் சென்று விடுகின்றனர்.
இதனால், குற்றவாளிகளை பிடிப்பது போலீஸாருக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. இதற்கிடையே, அண்மைக் காலமாக அரசியல் கட்சி பிரமுகர்களின் வாரிசுகள் மற்றும் உறவினர்கள் காரில் அரசியல் கட்சிக் கொடிகளைக் கட்டிக்கொண்டு வலம் வந்து, அப்பாவி பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகளை மிரட்டுவது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களைக் கண்டிக்க வேண்டிய உள்ளூர் போலீஸார் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது: தொழில் நகரமான ஓசூரில் ரவுடிகளால் பொதுமக்களுக்கு அதிக தொல்லைகள் இருந்த நிலையில் போலீஸார் அதை கட்டுப்படுத்தினர். தற்போது, அரசியல்வாதிகளின் பின்புலத்துடன் பலர் அப்பாவி மக்களுக்கு தொல்லை கொடுக்க தொடங்கியுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் மீது திமுக பிரமுகரின் மகன் உள்ளிட்டோர் காரை ஏற்றிக் கொன்றனர். பொதுமக்களுக்கு மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்திய இந்த வழக்கில் கைதான 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.
மேலும், மாநகரில் மீண்டும் தலைதூக்கும் குற்றங்களைத் தடுக்க காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அப்பாவிகளை அச்சுறுத்தும் நபர்கள் மீது சமரசமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர். இதுதொடர்பாக போலீஸார் கூறும்போது, “ஓசூர் மாநகரில் சிப்காட், மத்திகிரி, அட்கோ, டவுன், நல்லூர் ஆகிய 5 காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்கள் நீதிமன்ற பணி, மருத்துவமனை, பாதுகாப்பு பணி, சம்மன் வழங்குவது உள்ளிட்ட பணிகளுக்கு சென்று விடுகின்றனர்.
எனவே, அதிகப் பரப்பளவு உள்ள மாநகருக்கு கூடுதல் காவல் நிலையங்களும், காவலர்களும் கட்டாயம் தேவை. இதுதொடர்பாக அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஓசூரில் இருந்த பிரபல ரவுடிகள் பலர் இறந்து விட்டனர்.
சிலர் சிறையில் உள்ளனர். தற்போது அரசியல்வாதிகளின் பின்புலத்துடன் சிலர் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் ஆதரவாக உள்ளதால், சட்ட நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. இதனால், அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.ஓசூர் மாநகர பகுதியில் நெருக்கமாக உள்ள குடியிருப்புகள்.