க்ரைம்

கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: ஆழ்வார்திருநகரி அருகே தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, தூத்துக்குடி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி, நவலட்சுமிபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த பிச்சை மகன் மாரிமுத்து (33). தொழிலாளியான இவர் அதே பகுதியைச் சேர்ந்த அந்தோணிராஜ் என்பவரின் தம்பி ஏசுராஜாவை அன்றாட வேலைக்கு அழைத்துச் சென்றார்.

சம்பள பாக்கி தொடர்பாக அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு நடந்துள்ளது. இதனால், இரு குடும்பத்தினர் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.

கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் மாரிமுத்துவும், அவரது உறவினர்களும் சேர்ந்து ஏசுராஜாவையும், அவரது அண்ணன் அந்தோணிராஜையும் தாக்கினர். இதையடுத்து, அந்தோணிராஜ், மரியசிலுவை மற்றும் உறவினர்கள் சேர்ந்து மாரிமுத்துவின் வீட்டை அடித்து உடைத்து பொருட்களை திருடினர். இரு தரப்பினர் மீதும் ஆழ்வார்திருநகரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரலில் மாரிமுத்து தனது மனைவியுடன் தனது தந்தை பிச்சை வீட்டுக்கு சென்றுவிட்டு நவலட்சுமிபுரம் நடுத்தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த நவலட்சுமிபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த சந்தியப்பன் (50), அவரது மகன் அந்தோணிராஜ் (30), வாய்க்கால்கரை தெருவைச் சேர்ந்த நிக்கோலஸ் மகன் மரியசிலுவை (54), இவரது மகன்கள் அருள்ராஜ் (31), ஞானசேகர் (29), குணசிங் (26) ஆகிய 6 பேரும் சேர்ந்து மாரிமுத்துவை கொலை செய்தனர்.

இதுகுறித்து, ஆழ்வார்திருநகரி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் போது, மரியசிலுவை இறந்து விட்டார். மற்றவர்கள் மீதான விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா, குற்றம்சாட்டபட்ட அருள்ராஜ், அந்தோணிராஜ், ஞானசேகர், குணசிங், சந்தியப்பன் ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.7,500 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

SCROLL FOR NEXT