இரட்டை ஆயுள் விதிக்கப்பட்ட குற்றவாளிகள்.

 
க்ரைம்

காங்கிரஸ் பிரமுகர் கொலையில் 5 பேருக்கு இரட்டை ஆயுள்

செய்திப்பிரிவு

தென்காசி: தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜகோபால், காரில் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் மணக்காடு தெருவைச் சேர்ந்தவர் ராஜகோபால் (43). செங்கோட்டை வட்டார காங்கிரஸ் தலைவராக இருந்த இவர், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். கடந்த 2015 ஆக.12-ம் தேதி அச்சன்புதூர் பகுதியில் நின்றிருந்த ராஜகோபாலை, காரில் வந்த சிலர் கடத்திச் சென்றனர். இதுகுறித்து அச்சன்புதூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மறுநாள் பாளையங்கோட்டை அருகே தாழையூத்து - நாகர்கோவில் புறவழிச் சாலையில் உள்ள முடிக்குளத்தின் கரையில் தலை துண்டிக்கப்பட்டு, உடல் எரிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்தது. அதே சாலையில் கக்கன் நகர் மேம்பாலத்தின் அருகே உள்ள சர்வீஸ் ரோட்டில் துண்டிக்கப்பட்ட தலை, தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

கொலை செய்யப்பட்டவர் செங்கோட்டை வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜகோபால் என்பதும், பணப் பிரச்சினையில் கொலை நடந்ததும் பாளையங்கோட்டை போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. தலைவன்கோட்டையைச் சேர்ந்த சாமிதுரை (59), முத்துராஜ் (39), சொக்கம்பட்டியைச் சேர்ந்த அய்யப்பன் (44), திரிகூடபுரத்தைச் சேர்ந்த ராமர் (54), வாசுதேவநல்லூரைச் சேர்ந்த சுப்பையா பாண்டியன் ஆகிய 5 பேரை அச்சன்புதூர் போலீஸார் கைது செய்தனர். தென்காசி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது.

குற்றவாளிகள் 5 பேருக்கும் ஆள் கடத்தலுக்காக ஓர் ஆயுள் தண்டனை, கொலைக்காக ஓர் ஆயுள் தண்டனை, தடயங்களை மறைத்ததற்காக 5 ஆண்டுகள் தண்டனை விதித்து, நீதிபதி மனோஜ் குமார் நேற்று தீர்ப்பளித்தார். 5 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வழக்கறிஞர் வேலுசாமி ஆஜராகி வாதாடினார்.

SCROLL FOR NEXT