கொலை செய்யப்பட்ட மாரி என்கிற ரூபன்

 
க்ரைம்

திருவள்ளூர் அருகே நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த இளைஞர் கொலை: 3 பேர் கைது

இரா.நாகராஜன்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் அருகே உள்ள சிட்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரி என்ற ரூபன் (33). இவர், அப்பகுதியில் மின்சார வாரியத் துறை ஊழியர்களிடம் தகராறு செய்த வழக்கில் சிறைக்குச் சென்று நிபந்தனை ஜாமீனில் சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். நிபந்தனையின் அடிப்படையில், மாரி கடந்த 3 நாட்களாக வெங்கல் காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்தார்.

இந்நிலையில், இன்று காலை வெங்கல் காவல் நிலையத்துக்கு சென்று கையெழுத்து போட்டுவிட்டு, தன் நண்பர் வெங்கடேஷ் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, மாரியை காரில் பின் தொடர்ந்து வந்த கும்பல் ஒன்று, வெங்கல் அடுத்த பாகல்மேடு பகுதியில் அவர் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை இடித்து தள்ளி, மாரியை கத்தியால் வெட்டி கொலை செய்தனர்.

இதனிடையே, அங்கிருந்து தப்ப முயன்ற கொலை கும்பலை சேர்ந்த மூவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து, போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், 3 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, கொலை செய்யப்பட்ட மாரி மீது ஏற்கெனவே 2 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

வெங்கல் காவல் நிலையத்தில் இருந்து 2 கி.மீ., தொலைவில் பட்டப்பகலில் இந்த கொலை நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரே மாதத்தில் 2 கொலை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT