விருதுநகர்: விருதுநகர் அருகே கோஷ்டி மோதலில் தாக்கப்பட்ட கல்லூரி மாணவர் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார். இதனால், ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போலீஸார் குவிக்கப்பட்டனர்.
விருதுநகர் அருகேயுள்ள சத்திரரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் குருவம்மாள். கணவரைப் பிரிந்த இவர் கடந்த 15 ஆண்டுகளாக மகன், மகளுடன் வசித்து வருகிறார். இவரது மகன் அனஞ்சன் (19). கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.
இவரது நண்பர் ராம்குமார் (18). இவரும் அருகே உள்ள மதுரை மாவட்டத்துக்கு உட்பட்ட கொக்கலாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்தனர்.
ராம்குமார் கடந்த வாரம் தனது மற்றொரு நண்பரான கொக்கலாஞ்சேரியைச் சேர்ந்த மகாராஜன் (25) என்பவருடன் மது அருந்தினார். அப்போது, ராம்குமார் காதலிக்கும் இளம்பெண்ணின் தாயாருக்கும் தனக்கும் பழக்கம் உள்ளதாக மகாராஜன் கூறியுள்ளார்.
அது தொடர்பான வீடியோக்களை ராம்குமாரின் காதலிக்கு வாட்ஸ்ஆப்பில் மகாராஜன் அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக ராம்குமாரிடம் அவரது காதலி நேற்று முன்தினம் கேள்வி கேட்டு தகராறு செய்தார்.
இதனால் ஆத்திரமடைந்த ராம்குமார் தனது நண்பர் அனஞ்சன் உள்ளிட்டோருடன் கொக்கலாஞ்சேரிக்கு நேற்று முன்தினம் சென்று மகாராஜனுடன் வாக்குவாதம் செய்தனர். அப்போது இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர்.
தலையில் பலத்த காயமடைந்த அனஞ்சன் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக நேற்று காலை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மதுரை மாவட்டம் கள்ளிக்குடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்துகின்றனர்.
மேலும், கொக்கலாஞ் சேரியைச் சேர்ந்த நபர்கள் அருகே உள்ள சத்திரரெட்டிய பட்டியைச் சேர்ந்த ராம்குமார் உள்ளிட்டோரை தாக்கக் கூடும் என்பதாலும் மேலும் மோதல் ஏற்படும் சூழல் காரணமாக சத்திரரெட்டியபட்டியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இதையடுத்து, விருதுநகர் கூடுதல் எஸ்.பி. கருப்பையா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் சத்திரரெட்டியபட்டியில் குவிக்கப்பட்டனர். ஊருக்குள் செல்லும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன.
சத்திரரெட்டியபட்டியில் அனைத்துத் தெருக்களி லும் போலீஸார் பாது காப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.