சென்னை: அடையாறு பகுதியில் வசித்து வரும் 33 வயதுடைய பெண் நடனக் கலைஞர் கிளாசிக்கல் டான்ஸ் வகுப்பு எடுத்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை நடன வகுப்பு எடுப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சாஸ்திரி நகர் 1-வது குறுக்குத் தெரு வழியாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர், நடன கலைஞரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பி உள்ளார்.
இதில் அதிர்ச்சியடைந்த நடன கலைஞர் இது தொடர்பாக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட மேலும் சில பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இதில், பெண் நடன கலைஞரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பியது திருவான்மியூர் மருந்தீஸ்வரர் நகரைச் சேர்ந்த கணேஷ் (21) என்பது தெரிந்தது.
கல்லூரி மாணவரான அவரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரது இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.