கைது செய்யப்பட்ட கருப்புசாமி, காளீஸ்வரன், தவசி.
கோவை: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவை பீளமேடு விமான நிலையம் பின்புறம், பிருந்தாவன் நகரில் உள்ள காலியிடத்தில் கடந்த மாதம் 2-ம் தேதி இரவு ஆண் நண்பருடன் 21 வயதான கல்லூரி மாணவி பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கும்பல் ஆண் நண்பரை தாக்கிவிட்டு, மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீஸார் விசாரணை நடத்தி சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்களான சதீஷ் என்ற கருப்புசாமி (30), கார்த்திக் என்ற காளீஸ்வரன் (21), மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த குணா என்ற தவசி (20) ஆகியோரை, கடந்த மாதம் 3-ம் தேதி நள்ளிரவு போலீஸார் சுட்டுப்பிடித்து கைது செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக 50 பக்கம் கொண்ட முதல் கட்ட குற்றப்பத்திகை, 400 ஆவணங்கள் ஆகியவை கோவை மாவட்ட கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் போலீஸாரால் தாக்கல் செய்யப்பட்டன. பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக அதில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.
இதுகுறித்து மாநகர போலீஸார் தரப்பில் இன்று (டிச.3) கூறியதாவது: அதாவது, சம்பவம் நடந்த இரவு 11.10 மணிக்கு காரை உடைத்து மாணவியை கடத்திச்சென்ற 3 பேரும், அவரை மிரட்டி, அரசு பாலிடெக்னிக் வளாக சுற்றுச்சுவரை தாண்ட சொல்லி உள்ளனர்.
பின்னர், அந்த வளாகத்துக்குள் சென்று அங்குள்ள மோட்டார் அறைக்குள் அவரை அடைத்து வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இரவு 11.30 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரை அந்த மாணவியை நான்கரை மணி நேரம் அடைத்து வைத்துள்ளனர். அந்த மாணவியை 3 பேரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த பின்னர் அந்த அறைக்குள் அடைத்து வைத்துவிட்டு, வெளியே வந்தனர். அப்போது போலீஸ் வாகன சைரன் சத்தம் கேட்டது. உடனே சுற்றுச்சுவர் உள்புறம் இருந்து அந்த சத்தம் எங்கிருந்து வருகிறது என்று பார்த்தனர்.
அப்போது போலீஸ் வாகனங்கள் விமான நிலையத்தின் பின்புறத்தில் அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டு இருந்தன. அத்துடன் போலீஸாரும் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதை பார்த்ததும் தங்களை தான் போலீஸார் தேடுகின்றனர் என்பதை 3 பேரும் அறிந்து கொண்டனர். இருந்தபோதிலும் 3 பேரும் கல்லூரி சுற்றுச்சுவரின் உள்பக்கம் இருப்பதால் போலீஸார் அங்கு வரமாட்டார்கள் என்று உறுதிப்படுத்திவிட்டு, மோட்டார் அறைக்குள் சென்று மாணவியை மிரட்டி மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அதிகாலை 4 மணிக்கு பின்னர் அந்த மாணவியை மிரட்டி, சுவர் ஏறி குதித்து போக வைத்துள்ளனர். மாணவியை போலீஸார் மீட்ட பின்னர் அங்கிருந்து 3 பேரும் தப்பிச்சென்று உள்ளனர். அந்த 3 பேரிடம் இருந்து மாணவி கையில் அணிந்து இருந்த வெள்ளி மோதிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளன என போலீஸார் தெரிவித்தனர்.