சென்னை: சென்னையில் எஸ்.ஐ. தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, மனைவியே ஆண் நண்பர் மூலம் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜ் (58). இவர் புதுப்பேட்டை ஆயுதப்படை மோட்டார் பிரிவில் உதவி ஆய்வாளராக (எஸ்.ஐ.) பணியாற்றி வந்தார். இவரது மனைவி செல்வராணி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த 4 நாட்களாக ராஜ் விடுமுறையில் இருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் 3.30 மணியளவில் ராஜ் வீட்டின் முதல் தளத்தில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது வீட்டிலிருந்து கரும்புகை வெளியேறியது. மேலும், ராஜ் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில், அபாயக்குரல் எழுப்பினார். இதையடுத்து செல்வராணி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ராஜை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு ராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக செல்வராணியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
ராஜ் அண்மையில் போக்சோ வழக்கில் சிக்கியிருந்ததாகவும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸார் முதலில் கருதினர். ஆனால், தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சந்தேகம் ஏற்பட்டது. ராஜ் வீட்டின் அருகே பொருத்தப்பட்ட கண்காணிப்பு காட்சிகளை ஆய்வு செய்த போது, சம்பவத்தன்று இளைஞர் ஒருவர் ராஜ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியே வந்து, முகத்தை மறைத்தபடி தப்பிச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இது குறித்து செல்வராணி முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஆண் நண்பரை வீட்டுக்கு வரவழைத்து, அவர் மூலம் ராஜ் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொலை செய்தது தெரியவந்தது. இதனால் செல்வராணி கைது செய்யப்பட்டார்.
காரணம் என்ன?
செல்வராணி ஏற்கெனவே திருமணமாகி, கணவரை பிரிந்தவர். அதன்பின் ராஜை திருமணம் செய்துள்ளார். இருவருக்கும் இடையே 26 வயது வித்தியாசம். இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக செல்வராணி நீண்ட நேரம் செல்போனில் பேசியுள்ளார். அவரது நடவடிக்கையில் ராஜுவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தேவா என்ற ஆண் நண்பரை வீட்டுக்கு அழைத்து, ராஜ் மீது பெட்ரோல் ஊற்றி செல்வராணி எரித்து கொலை செய்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். தலைமறைவாக உள்ள தேவா பிடிபட்டால் ராஜ் கொலைக்கான காரணம் தெரியவரும்.