சிம்லால், அப்துல் ஹாடி, அனூப், ஆதித்யன்
சென்னை: சென்னை டிஆர்ஐ அலுவலகத்தில் நள்ளிரவில் காவலாளியைக் கட்டிப்போட்டு கார் கண்ணாடியை உடைத்து ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த விவகாரத்தில் கூலிப்படையைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தி.நகர், ஜி.என்.செட்டி சாலையில் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) இயங்குகிறது. தங்கம் கடத்தல் தொடர்புடைய 2 பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் ஒன்று இந்த அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த கடத்தல் வழக்கில் சர்வதேச கடத்தல் கும்பலின் தொடர்பு உள்ளதா என தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த வழக்கில் முக்கிய நபர்களும் சிக்கி இருந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட காரில் முக்கிய ஆவணங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதை சம்பந்தப்பட்ட கடத்தல் கும்பல் கொள்ளையடிக்க திட்டமிட்டது.
அதன்படி, கேரளாவைச் சேர்ந்த கூலிப்படையினர் கடந்த 31-ம் தேதி நள்ளிரவு தி.நகரில் உள்ள டிஆர்ஐ அலுவலக வளாகத்துக்குள் முகமூடி அணிந்து நுழைந்தனர். அவர்கள் காவலாளியான ஜான்கென்னடியை தாக்கி, வாயில் துணியைத் திணித்து, கை கால்களை கட்டினர்.
பின்னர் கூலிப்படை காரின் கண்ணாடியை உடைத்து அதிலிருந்த ஆவணைங்களை கொள்ளையடித்துவிட்டு தப்பியது. மறுநாள் காலை அலுவலகம் வந்த பணியாளர்கள் இதுகுறித்து தேனாம்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் விரைந்து வந்து காவலாளியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த கொள்ளை தொடர்பாக தேனாம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாக டிஆர்ஐ அலுவலகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் கைப்பற்றப்பட்டன.
இதில் கூலிப்படையைச் சேர்ந்த புதுச்சேரி காரைக்காலில் வசிக்கும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் வேலை செய்யும் அப்துல் ஹாடி (24), கேரளாவைச் சேர்ந்த ஜிம் மாஸ்டர்கள் அனூப் (33), ஆதித்யன் (20), சிம்லால் (53) ஆகிய 4 பேர் கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது.
தலைமறைவாக இருந்த இந்த 4 பேரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் தொடர்புடைய மேலும் சிலரையும் கூலிப்படையை ஏவி விட்டவர்களையும் தனிப்படை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.