கோப்புப்படம்
கோவை: கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், முதல்கட்ட குற்றப்பத்திரிகையை ஓரிரு நாட்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
கோவை பீளமேடு பகுதியில் கடந்த 2-ம் தேதி இரவு கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் என்ற கருப்புசாமி (30), கார்த்திக் என்ற காளீஸ்வரன் (21), மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த குணா என்ற தவசி (20) ஆகியோரை பீளமேடு போலீஸார் சுட்டுப்பிடித்து கைது செய்தனர். சிகிச்சைக்குப் பின் மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து சிறையில் நடந்த அடையாள அணிவகுப்பில், பாதிக்கப்பட்ட மாணவி, காயமடைந்த ஆண் நண்பர் ஆகியோர் தனித்தனியாக மூவரையும் அடையாளம் காட்டினர். மேலும், மூவருக்கும் ஆண்மைப் பரிசோதனை, டி.என்.ஏ பரிசோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதற்கிடையே, இந்த வழக்கில் 30 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தயாரிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதற்கேற்ப, கைது செய்யப்பட்ட மூவர் மீதான குற்றப்பத்திரிகையை தயாரிக்கும் பணியை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “முதல்கட்ட குற்றப்பத்திரிகை தயாரிப்புப் பணி தீவிரமடைந்துள்ளது. வழக்கு விசாரணையில் கிடைத்த தகவல்கள், பாதிக்கப்பட்டவர்கள் அளித்த விவரங்கள் ஆகியவற்றுடன் முதல் கட்ட குற்றப்பத்திரிகை தயாரிப்புப் பணி நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதிக்குள் கோவை மாவட்ட கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது” என்றனர்.